Published : 22 Sep 2024 09:36 AM
Last Updated : 22 Sep 2024 09:36 AM

சுகாதார துறைக்கு 3 ஆண்டில் 545 விருதுகள்: புதிய திட்டங்களை முதல்வர் செயல்படுத்துவதாக அரசு பெருமிதம்

சென்னை: மக்களுக்கு தரமான மருத்துவ வசதிகள் கிடைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் தமிழக சுகாதாரத் துறை கடந்த 3 ஆண்டுகளில் 545 விருதுகள் பெற்று சாதனை படைத்துள்ளதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக மக்களுக்கு தரமான மருத்துவ வசதிகள் கிடைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் சுகாதாரத் துறையில் புதிய பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். கடந்த 2021-ம்ஆண்டு ஆக.5-ம் தேதி மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் கடந்த மூன்றாண்டுகளில் ரூ.632 கோடியே 80 லட்சம் செலவில் 1 கோடியே 85 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம் கடந்த 2021 டிச.18-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இதுவரை 2.25 லட்சம் பேருக்கு உடனடி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. சாலை விபத்தில்சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்ப்போரை ஊக்குவித்து, அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கப் பரிசும் "நற்கருணை வீரன்" எனும் பட்டமும் வழங்கப்படுகிறது.

அதேபோல தொழிலாளர்களைத் தேடி மருத்துவம் என்கிற புதிய திட்டம் மூலம் இதுவரை 711 தொழிற்சாலைகளில் 5 லட்சத்து27,000 தொழிலாளர்கள் பரிசோதிக்கப்பட்டு, 26,861 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வருமுன் காப்போம் திட்டத்தை கலைஞரின் வருமுன் காப்போம் என பெயர் மாற்றப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளில் 4,042 முகாம்கள் நடத்தப்பட்டு 36 லட்சத்து 69,326 பேர் பயன்பெற்றுள்ளனர்.

மேலும் 25 ஆரம்ப மற்றும்25 நகர்ப்புற ஆரம்ப சுகாதாரநிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 100 ஆரம்ப சுகாதாரநிலையங்களை அமைக்க நடவடிக்கைககள் எடுக்கப்பட்டுள்ளது. சிறுநீரகப் பாதுகாப்புத் திட்டத்தால் 56 லட்சத்து 7,385 பேர்பயனடைந்துள்ளனர். 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்பு மற்றும் நாய் கடிக்கான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் 1,834மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படுகிறது. இது 1 கோடியே 47 லட்சம் குடும்பங்களை வாழ்வித்து வருகிறது. உடல் உறுப்பு தானம் திட்டத்தின் மூலம், இதுவரை 467 பேரிடமிருந்து 223 இதயம், 292 நுரையீரல், 409 கல்லீரல், 810 சிறுநீரகம் என மொத்தம் 2,789 உறுப்புகள் பெற்று பலருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. மூளைச்சாவு அடைந்த உறுப்புக் கொடையாளிகள் 250 பேரின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டுள்ளது.

மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் 3 ஆண்டுகளில் 1,947 மருத்துவர்கள் உட்பட3,238 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

1,911 ஒப்பந்த செவிலியர்கள் காலமுறை ஊதியத்தில் பணிஅமர்த்தப்பட்டுள்ளனர். கரோனா காலத்தில் தற்காலிக பணியாற்றிய 1,412 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை கிண்டியில் ரூ.387 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் ஓராண்டில் மட்டும் 3 லட்சத்து 13,864 பேர்சிகிச்சை பெற்றுள்ளனர். ரூ.1,018.85கோடியில் 19 அரசு மருத்துவமனைகள் தலைமை மருத்துவமனைகளாகவும், 6 அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்தும் பணிகளும் நடைபெறுகின்றன.நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தில் 38 மாவட்டங்களில் நடைபயிற்சி பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் கண் தானத்தில் சிறந்துவிளங்குகிறது. 3 ஆண்டுகளில் ரூ.3,888.52 கோடியில் மருந்துகளும், ரூ.1,875.26 கோடியில் மருத்துவ உபகரணங்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழக சுகாதாரத் துறையின் செயல்பாடுகளை பார்வையிட்ட ஆஸ்திரேலிய அமைச்சர், குஜராத்,மேகாலயா மாநில மருத்துவக் குழுக்கள் பாராட்டு தெரவித்துள்ளனர். 3 ஆண்டுகளில் தமிழக சுகாதாரத் துறை 545 விருதுகளை பெற்றுள்ளது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் தமிழகம் பல விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x