Published : 08 Aug 2014 10:00 AM
Last Updated : 08 Aug 2014 10:00 AM

விஷவாயு தாக்கி பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

தமிழகத்தில் 1993-ம் ஆண்டிலிருந்து விஷவாயு தாக்கி பலியான துப்புரவுத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை மஹபூப்பாளையத்தைச் சேர்ந்த ஏ. கொண்டவெள்ளை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:

நிவாரணம் இல்லை

தமிழகத்தில் புதை சாக்கடை மற்றும் கழிவறைத் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது துப்புரவுத் தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலியாகும் சம்பவம் அடிக்கடி நேரிடுகிறது. ஆனால், பலியாகும் தொழிலாளரின் குடும்பத்துக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படுவதில்லை. அவர்களது குடும்பத்தினரின் புனர்வாழ்வுக்கும் ஏற்பாடுகள் செய்வதில்லை.

இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டு பலியாகும் துப்புரவுத் தொழிலாளரின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்குவதுடன், அவர்களது குடும்பத்தினரின் புனர்வாழ்வுக்கும் உதவி செய்ய வேண்டும் என்று கடந்த மார்ச் 27-ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது, 1993-ம் ஆண்டு முதல் விஷவாயு தாக்கி பலியான துப்புரவுத் தொழிலாளர்களுக்கும் பொருந்தும்.

விஷவாயு தாக்கி 800 பேர் பலி

தமிழகத்தில் 1993-ம் ஆண்டில் இருந்து இதுவரை 800-க்கும் அதிகமான துப்புரவுத் தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி இறந்திருப்பதாகத் தெரிகிறது. எனவே, தமிழகத்தில் 1993-ம் ஆண்டிலிருந்து விஷவாயு தாக்கி பலியான துப்புரவுத் தொழிலாளர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களது குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் புனர்வாழ்வுக்கான வசதிகளை செய்ய உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம். ஜெய்சந்திரன், ஆர். மகாதேவன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், மனு குறித்து 4 வாரங்களில் பதிலளிக்க மத்திய சமூகநீதி மற்றும் திட்ட அமலாக்கத் துறை செயலர், தமிழக தலைமைச் செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர், ஆதிதிராவிடர் நலத் துறை முதன்மைச் செயலர், பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறை இயக்குநர், நகராட்சி நிர்வாக ஆணையர், மக்கள் தொகை கணக்கெடுப்பு மண்டல இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x