Last Updated : 02 Jun, 2018 05:37 PM

 

Published : 02 Jun 2018 05:37 PM
Last Updated : 02 Jun 2018 05:37 PM

சென்னை உள்ளிட்ட 4 நகரங்களில் நாளை பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் களப்பணி; நீங்களும் களமிறங்கலாமே

ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சுற்றுச்சூழலைக் காக்கும் விதமாகவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிற விதமாகவும் இளைஞர்கள் சேர்ந்து பிளாஸ்டிக் குப்பைகளையும் கழிவுகளையும் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை (E.F.I) எனும் அமைப்பு, வருகிற ஜூன் மாதம் முழுவதுமே நீர்நிலைப் பகுதிகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுவது என முடிவு செய்து இயங்கி வருகிறது.

கடந்த பத்து வருடங்களாக இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதுவரை இந்தியா முழுவதும் 83 ஏரி, குளங்களைத் தூர்வாரியுள்ளோம் என பெருமையுடன் தெரிவிக்கின்றனர், அமைப்பினர்.

’’ஐ.நா.சபை, கடந்த 1974-ம் ஆண்டு உலக மக்களிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கத்துடன் ஜூன் மாதம் 5-ம் தேதியை உலக சுற்றுச்சூழல் தினமாக அறிவித்தது. வருடந்தோறும் ஒவ்வொரு நாட்டினை ‘ஹோஸ்ட்’ ஆக, அம்பாசடர் போல் தேர்வு செய்து அறிவிக்கும். அதேபோல், இந்த வருடம் நம் இந்தியாவை அறிவித்துள்ளது.

கடந்த 10 வருடங்களாக, வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீர் நிலைகளை சுத்தப்படுத்தும் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறோம். உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5 செவ்வாய்க்கிழமை. வேலை நாள். எனவே எல்லோரும் பங்குகொள்ளும் வகையில், நாளைய தினமான ஞாயிற்றுக்கிழமையை (3.6.18) தேர்வு செய்தோம்.

நாளை காலை 7 மணியில் இருந்து 9 மணி வரை இரண்டு மணி நேரம் உங்களால் ஒதுக்கமுடியுமா. நமக்காகவும் நம் தேசத்துக்காகவும் குறிப்பாக நம் சந்ததியினருக்காகவும் நீர் நிலைகளைப் பாதுகாக்கும் வகையில், மக்காத பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்துவோம் வாருங்கள்’’ என்கிறார்கள் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

இதற்கு நாங்கள், ‘நன்னீர் நம் நீர்’ என்று தலைப்பிட்டிருக்கிறோம். ஏற்கெனவே சென்னை முடிச்சூருக்கு அருகில், கரசங்கால் ஏரியை முழுவதுமாக தூர் வாரி, ஏரியைச் சுற்றியுள்ள பகுதியையும் சுத்தப்படுத்தி, ஏரியைச் சுற்றிலும் நம் நாட்டு மரங்களையும் நட்டிருக்கிறோம். அதாவது, புங்கை, வேம்பு, மகிழ மரங்களை நட்டிருக்கிறோம். பட்டாம்பூச்சி, பறவைகள், ஆமைகள் என அனைத்துக்கும் பயன்படும் விதமாக இந்த மரங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.

நீரில் ஆமை இருக்கும். மரத்தில் அமர்ந்து பறவைகள் சாப்பிடும். அது சாப்பிட்டு தூக்கிப் போடுகிற எச்சங்கள், விதைகளை ஆமைகள் சாப்பிடும். அதேபோல், மரத்தில் உள்ள பூக்களையும் கீழே விழும் பழங்களையும் கூட ஆமைகள் சாப்பிடும். அதற்காகத்தான், அந்தக் காலத்தில் ஏரிகுளங்களைச் சுற்றிலும் மரங்கள் வைத்தார்கள் முன்னோர்கள். இப்போது மரங்களில்லை. பறவைகளுக்கு உணவும் இல்லை. 93 சதவிகிதம் நீர் சார்ந்த பறவைகளின் வயிற்றில் பிளாஸ்டிக் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன என்றால் நம்பமுடிகிறதா நம்மால்? ஆனால் இதுவே நிஜம்.

நாளைய தினத்தில் (ஞாயிற்றுக்கிழமை - 3 ஆம் தேதி) இரண்டு மணி நேரம் மட்டும் ஒதுக்குங்கள்.

சென்னை, கோவை, நெல்லை, புதுச்சேரி உள்ளிட்ட ஊர்களில் உள்ள ஏரிகளில் இணைந்து பணியாற்ற இருக்கிறோம். சமூக வலைதளங்களின் மூலமாக நாளைய தூய்மைப்படுத்தும் பணியில், சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு செயலாற்றுவதாகத் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் மாடம்பாக்க, நன்மங்கலம், முடிச்சூர் சூகன் ஏரி, கழிப்பட்டூர் ஏரி, கரசங்கால் ஏரிகளிலும் பட்டினப்பாக்கம், அஷ்டலட்சுமி கோயில், திருவான்மியூர், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், மாமல்லபுரம் முதலான கடற்கரைப் பகுதிகளில், கோவை நகரில் கிருஷ்ணாம்பதி ஏரியிலும், புதுச்சேரியில் நல்லவாடு கடற்கரை, ராமேஸ்வரம் கடற்கரை பகுதிகளிலும் நன்னீர் நம் நீர் எனும் தலைப்பில் களப்பணி செய்கிறோம். நீங்களும் வாருங்கள்!

மேலும் பொதுமக்களுக்கு சின்ன அறிவுரை...

1.கடைகளுக்குச் செல்லும் போது வீட்டில் இருந்தே துணிப்பை கொண்டு செல்லும் பழக்கத்தை பழையபடி ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

2. பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரை வாங்காதீர்கள்.

3. காப்பர் பாட்டில்கள், ஸ்டீல் பாட்டில்கள் ஆகியவற்றையே பயன்படுத்துங்கள்.

4. பாக்கெட் தண்ணீர் வேண்டவே வேண்டாம்.

5. பிளாஸ்டிக் கயிறுகளைத் தவிர்க்கவும். பழையபடி, சணல் கயிறுகளைப் பயன்படுத்துங்கள். சணலால் செய்யப்பட்ட பைகள், தரமாகவும் நவீனமாகவும் வந்துவிட்டன. அவற்றைப் பயன்படுத்துங்கள்.

நன்னீர் காப்போம்; நம் நீர் காப்போம் என்று தெரிவிக்கின்றனர் இந்தியச் சுற்றுச்சூழல் அறக்கட்டளை அமைப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x