Published : 08 Jun 2018 10:05 AM
Last Updated : 08 Jun 2018 10:05 AM

பல்வேறு நிறுவனங்கள் முன்வந்துள்ளன ரூ.45 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய தொழில்கள் தொடங்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் சம்பத் அறிவிப்பு

சட்டப்பேரவையில் நேற்று தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:-

வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் வணிக நுண்ணறிவு மற்றும் புள்ளிவிவர இயக்குநரகம் தயாரித்த புள்ளிவிவரப்படி, 2016-17-ம் ஆண்டில் தமிழ்நாட்டின் மொத்த ஏற்றுமதி ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் கோடியாகும். ஏற்றுமதி செய்யப்பட்ட முக்கியப் பொருட்களில் மோட்டார் வாகனங்கள், வாகன உதிரி பாகங்கள், பிற பொறியியல் பொருட்கள், ஜவுளி மற்றும் ஆடைகள், தோல் பொருட்கள், மருந்துகள், மருந்து பொருட்கள், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், மென் பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஆகியன அடங்கும்.

2011-ம் ஆண்டு மே முதல் 2017-ம் ஆண்டு டிசம்பர் வரை தமிழ்நாட்டில் ஈர்க்கப்பட்ட அந்நிய நேரடி முதலீடு ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 99 கோடியாகும். கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையிலான 11 ஆண்டுகளில் ஈர்க்கப்பட்ட அந்நிய முதலீடு ரூ.33 ஆயிரத்து 24 கோடிதான். இந்த 11 ஆண்டுகளில் ஈர்க்கப்பட்ட அந்நிய நேரடி முதலீடுகளைவிட 3 மடங்குக்கும் அதிகமான அந்நிய முதலீடுகளை கடந்த 6 ஆண்டுகளில் தமிழகம் ஈர்த்துள்ளது.

ரூ.2 ஆயிரத்து 500 கோடியில் மோட்டார் வாகன உற்பத்தித் திட்டம், ரூ.4 ஆயிரத்து 500 கோடியில் டயர் உற்பத்தி ஆலை திட்டம், ரூ.2 ஆயிரம் கோடியில் கண்ணாடி மற்றும் கண்ணாடி இழை உற்பத்தி மற்றும் விரிவாக்கத் திட்டம், 1,000 கோடி ரூபாயில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உட்பட இரண்டு சக்கர வாகன உற்பத்தி ஆலைகள், ரூ.28 ஆயிரத்து 800 கோடியில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு திட்டங்கள், ரூ.500 கோடியில் டயர் வேதிப் பொருட்கள் உற்பத்தித் திட்டம், ரூ.1,800 கோடியில் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தித் திட்டங்கள், ரூ.350 கோடியில் ஜவுளித் திட்டம், ரூ.4 ஆயிரம் கோடியில் பிற திட்டங்கள் என மொத்தம் ரூ.45 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள் தொடங்க பல்வேறு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x