சிறைக் கைதிகளின் பாதுகாப்புக்காக கண்காணிப்புக் குழு கோரி வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சிறைக் கைதிகளின் பாதுகாப்புக்காக கண்காணிப்புக் குழு கோரி வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழுவதும் சிறைக்குள் இருக்கும் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைத்து கண்காணிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு, மாநில மனித உரிமைகள் ஆணையம் மற்றும் சிறைத் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரை, வேலூர் சிறைத் துறை டிஐஜி ராஜலட்சுமி, தனது வீட்டு வேலைக்காக அழைத்து சென்று, பின்னர் வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை திருடியதாகக் கூறி அவரை தாக்கி தனிமை சிறையில் அடைத்து சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் டிஐஜி ராஜலட்சுமி உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் விசாரணை கைதிகளையும், தண்டனை கைதிகளையும் அடித்து துன்புறுத்தி மனித உரிமை மீறலில் ஈடுபடும் சிறைத் துறை அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கோரி கேரளாவைச் சேர்ந்த அஷ்வின்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவர் தனது மனுவில் ‘போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தன்னை கோவை சரவணம்பட்டி போலீஸார் கைது செய்து, விசாரணை கைதியாக கடந்தாண்டு ஏப்ரல் முதல் கடந்த ஜூன் மாதம் வரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். வேலூர் சிறையில் விசாரணை கைதிகளை சிறைத் துறை அதிகாரிகள் நிர்வாணமாக்கி, தனிமை சிறையில் அடைத்தும், இருட்டு அறையில் அடைத்தும் சித்ரவதை செய்து வருகின்றனர். இதுதொடர்பாக கேள்வி கேட்டால் தண்டனை இன்னும் கொடூரமாக இருக்கும்.

சிறைக்குள் நடக்கும் இந்த அத்துமீறல்களால் பல கைதிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் அந்த சம்பவங்களை அதிகாரிகள் வெளியே தெரியாமல் மறைத்து விடுகின்றனர். எனவே, தமிழகம் முழுவதும் சிறைக்குள் இருக்கும் கைதிகளை அடித்து துன்புறுத்தும் சிறைத் துறை அதிகாரிகளுக்கு எதிராக துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், மாநிலம் முழுவதும் சிறைகளில் உள்ள கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிறைகள் கண்காணிப்பு குழு ஒன்றை அமைக்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக தமிழக அரசு, மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் சிறைத் துறை அதிகாரிகள் 4 வார காலத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in