Published : 21 Sep 2024 07:16 AM
Last Updated : 21 Sep 2024 07:16 AM
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை: பல ஆண்டுகளுக்கு முன்பு தனியார் அமைப்பு ஒன்று அனுப்பியஆதாரமற்ற புகாரின் அடிப்படையில் அதிமுகவின் தலைமை நிலையச் செயலாளரும், முன்னாள்உள்ளாட்சித் துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் திமுக அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது.
உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி இருந்தபோது, சென்னை மாநகராட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்பட்டவெள்ள பாதிப்பை நிரந்தரமாக சரிசெய்ய 4 ஆண்டுகளில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 196 கி.மீ. நீள ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் நீர்நிலைகள் மறுசீரமைப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கூவம், அடையாறு கரையோரங்களில் வசித்து வந்த 17,750 குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, அடுக்குமாடி குடியிருப்புகளில் மறுகுடியமர்வு செய்யப்பட்டனர். எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில், குறிப்பாக 2017 முதல் 2021 வரை, 4 ஆண்டுகளில் மத்தியஅரசிடமிருந்து ஊரக வளர்ச்சித் துறையில் மட்டும் 123 விருதுகளும், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் பல விருதுகளும் பெற்று சாதனை படைத்தவர்.
மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பத்திரப்புதிவு கட்டண உயர்வு உள்ளிட்ட அரசின் அனைத்துக் கட்டணங்களும் பல மடங்கு உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை, கள்ளச் சாராயம், தமிழகத்தை கஞ்சா மற்றும் போதைப் பொருள் கேந்திரமாக மாற்றியது என்று திமுக அரசின் மீது தமிழக மக்கள் கோபத்தின் உச்சியில் உள்ளனர்.
அவர்களின் கவனத்தை திசை திருப்ப, லஞ்ச ஒழிப்புத் துறையை முதல்வர் ஸ்டாலின் ஏவி விட்டிருக்கிறார். இதன்மூலம் அதிமுகவை முடக்கிவிடலாம், திமுக அராஜக அரசின் அவலங்களை மக்களிடம் தோலுரித்துக் காட்டும் எங்களது செயல்களை தடுத்து நிறுத்திவிடலாம் என்று முதல்வர் கருதுகிறார். திமுக ஆட்சியின் ஆயுட்காலம் இன்னும் 19 அமாவாசைகள்தான், நாட்கள் எண்ணப்படுகின்றன. சர்வாதிகார ஆட்சி நடத்தியதற்காக மக்களிடம் பதில் சொல்லும் நாட்கள் வெகுதூரத்தில் இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT