

சென்னை: ஆச்சி உணவுக் குழுமம் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் பனப்பாக்கம் கிராமத்தில் உணவு பதப்படுத்தும் ஆலையை, பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாகத் திறந்துவைத்தார்.
இதுகுறித்து ஆச்சி உணவுக்குழுமம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கரோனாகாலத்தில் இந்திய தொழிற்துறை பின்னடைவை சந்தித்தபோது, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக மத்திய அரசு தொலைநோக்குப் பார்வையுடன் `பிஎல்ஐ' என்ற திட்டத்தை அறிவித்தது.
அதன்படி, நிறுவனங்கள் கூடுதலாக முதலீடு செய்து, உற்பத்தியை கணிசமாக உயர்த்த வேண்டும். உற்பத்தி பெருக்கத்துக்கு ஏற்ப, மத்திய அரசு ஊக்கத்தொகை வழங்கும். இந்த திட்டத்துக்கான விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. நாடு முழுவதும் 35 உணவு நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. பிரதமர் மோடி காணொலி வாயிலாக, புதிய நிறுவனங்களைத் தொடங்கிவைத்துப் பேசினார்.
ஆச்சி உணவுக் குழுமம், இந்தியஅரசின் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தில் ரூ.84.66 கோடி முதலீடு செய்துள்ளது. இதுகுறித்து ஆச்சி உணவுக் குழுமத் தலைவர் ஏ.டி.பத்மசிங் ஐசக் கூறியதாவது:
ஆச்சி நிறுவனம் 220 வகையான உணவுப் பொருட்களை தயாரித்து, நாடு முழுவதும் 15 லட்சம் சிறிய கடைகள் மூலம் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு விநியோகித்து வருகிறது. பிஎல்ஐ திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 14 துறைகளில் தலைசிறந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன.
உணவு பதப்படுத்தும் துறையில் ஆச்சி உணவுக் குழுமமும் தேர்வு செய்யப்பட்டதை பெருமையாகக் கருதுகிறோம். இதற்காகபிரதமருக்கும், உணவுப் பதப்படுத்தும் துறை அமைச்சகத்துக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆச்சி உணவுக் குழுமம் மத்தியஅரசின் பிஎல்ஐ திட்டத்தின் கீழ்ரூ.84.66 கோடி முதலீடு செய்துள்ளது. அதில் ரூ.45 கோடியில் நிறுவனஉட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு, ரூ.40 கோடியில் நவீன இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. பிஎல்ஐ திட்டத்தில் இணைந்து இருமுறை ஊக்கத்தொகை பெற்றுள்ளோம். இந்த திட்டத்தின் வாயிலாக 420 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளோம்.
2023-24 நிதியாண்டில் ஆச்சி உணவுக் குழுமம் ரூ.2,200 கோடிஅளவுக்கு விற்பனை செய்துள்ளது. அடுத்த நிதியாண்டில் ரூ.3 ஆயிரம்கோடி விற்பனை இலக்கை எட்டுவோம். 2025-க்குள் 5 ட்ரில்லியன் டாலர் என்ற பிரதமரின் பொருளாதார இலக்கை அடைவதற்கு, எங்கள் பங்களிப்பை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் வெற்றிகரமாக செயல்பட உறுதுணையாக இருக்கும் தமிழக அரசையும் பாராட்டுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.