Published : 21 Sep 2024 05:40 AM
Last Updated : 21 Sep 2024 05:40 AM
சென்னை: துணைவேந்தர் நியமனம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பல்கலைக்கழக அலுவலர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்வி மானிய நிதி ரூ.80 கோடியை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
சென்னை பல்கலைக்கழகத்துக்கு உடனடியாக துணைவேந்தரை நியமிக்க வேண்டும். கடந்த 6 ஆண்டுகளாக ஆசிரியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள 7-வது ஊதியக்குழு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு இதுவரை வழங்கப்படாமல் உள்ள நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும். உரியகாலத்தில் வழங்கப்படாமல் இருந்துவரும் பதவி உயர்வை வழங்க வேண்டும்.
காலியாகவுள்ள உதவி பேராசிரியர், நிர்வாக பணியாளர், தொழில்நுட்பபணியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில்பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றுஉண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட அலுவலர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
கையெழுத்தில்லா பட்டம் செல்லாது: இப்போராட்டம் குறித்து நிர்வாகிகள் பாலு, காளி, கதிரவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு சார்பில் சென்னை பல்கலைக்கழகத்துக்கு வழங்க வேண்டிய கல்வி மானிய நிதி ரூ.80 கோடி இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் பல்கலைக்கழகத்தின் பெரும்பான்மை செயல்பாடுகள் முடங்கி கிடக்கின்றன. இந்நிலை தொடர்ந்தால் பல்கலைக்கழகத்தின் கல்வி சூழல் வெகுவாக பாதிக்கும்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக துணைவேந்தர் பதவிகாலியாக உள்ளது. இதனால் பல்வேறுநிர்வாக சிக்கல்கள் எழுந்துள்ளன. பட்டமளிப்பு விழா வருகிற 24-ம் தேதிநடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துணைவேந்தரின் கையெழுத்து இல்லாமல் மாணவர்களுக்கு வழங்கப்படும் பட்டங்கள் செல்லாது. எனவே உடனடியாக துணைவேந்தரை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT