Published : 07 Jun 2018 08:38 AM
Last Updated : 07 Jun 2018 08:38 AM

கிருஷ்ணகிரி அணையில் இருந்து 1,900 கனஅடி நீர் திறப்பு: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி அணையில் விநாடிக்கு 1,900 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், நேற்று காலை நிலவரப்படி ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு விநாடிக்கு 800 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் முழு உயரத்துக்கும் தண்ணீர் உள்ளதால், அணைக்கு வரும் நீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறக்கப்பட்டு வரும் தண்ணீர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழைநீரையும் சேர்த்து, கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1,068 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. புதிய மதகு அமைக்கும் பணிக்காக நேற்று மாலை 4 மணியளவில் அணையில் 3 முறை அபாய ஒலி எழுப்பப்பட்டு விநாடிக்கு 1,900 கனஅடி நீர், 3 சிறிய மதகுகள் வழியாக தென்பெண்ணை ஆற்றிலும், பாசனக் கால்வாய் வழியாகவும் திறக்கப்பட்டது. தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அணையின் உதவி செயற்பொறியாளர் நடராஜன் கூறும்போது, “கிருஷ்ணகிரி அணையில் தரைப்பாலம் மூழ்கிவிட்டதால், அணைக்குள் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக உள்ளதால், பொதுப்பணித்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அணையின் நீர்மட்டம் 34.80 அடியாக உள்ளது. மதகு அமைக்கும் பணிக்காக இன்னும் 3.80 கனஅடி நீர் வெளியேற்றப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x