

இலங்கையை சேர்ந்த தமிழ் எம்.பி.க்கள் தமிழக பாஜக தலைவர்களை இன்று (புதன் கிழமை) சந்தித்து இலங்கை தமிழர் பிரச்சினை மற்றும் மீனவர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இலங்கையை சேர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் குழு அதன் தலைவர் சம்பந்தன் தலைமையில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை டெல்லியில் கடந்த வாரம் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் இலங்கையில் தமிழர்களுக்கு உரிய அதிகாரப் பகிர்வினை அளிக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்நாட்டு எம்.பி.க்கள் கோரிக்கை வைத்தனர். ‘இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுதான் ஒரே வழி என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி’ கூறியிருந்தார்.
இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் இன்று தமிழக பாஜக தலைவர்களை சென்னையில் அக்கட்சியின் அலுவலகத்தில் சந்தித்து பேசவுள்ளனர். இப்பேச்சுவார்த்தையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், மாவை எஸ்.சேனாதிராஜா, பொன்.செல்வராஜ், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட தமிழ் எம்.பி.க்கள் குழு பங்கேற்கவுள்ளனர். தமிழக பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், மாநில பொதுச்செயலாளர் வானதி னிவாசன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.