புதிய பாம்பன் ரயில் பாலத்தை முற்றுகையிட மீனவர்கள் முடிவு

புதிய பாம்பன் ரயில் பாலத்தை முற்றுகையிட மீனவர்கள் முடிவு
Updated on
1 min read

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் உள்ள தனியார் அரங்கத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை, காரைக்கால், தஞ்சாவூர் ஆகிய ஆறு மாவட்ட மீனவர்களின் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை (செப்.20) மாலை நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மீனவப் பிரதிநிதி சேசுராஜா தலைமை வகித்தார். மீனவப் பிரதிநிதிகள் போஸ், சகாயம், தட்சிணாமூர்த்தி, லூர்துராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தொடர் மனித உரிமை மீதான தாக்குதல்களை கண்டிக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை கடற்படையினரால் கடந்த மூன்று மாதங்களில் சிறைப்பிடிக்கப்பட்ட 108 மீனவர்களில் 78 மீனவர்கள் மீது ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். இந்த சிறை தண்டனை வழங்கப்பட்ட மீனவர்களை எவ்விதமான அபராதம் செலுத்தாமல் மத்திய அரசு மீட்டுத் தரவேண்டும்.

கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 188 படகுகளையும் இலங்கை அரசிடம் விடுவிக்க ராஜாங்க ரீதியில் மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். கடல் அட்டை மீதான தடையை மத்திய அரசு நீக்க வேண்டும். மீனவர்களின் படகுகளுக்கு டீசல் வரி விதிப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மீனவர்களின் கோரிக்கைளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் புதிய பாம்பன் ரயில் பாலம் திறப்பு அன்று பாலத்தை முற்றுகையிட்டு ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும், என மீனவர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in