

குரோம்பேட்டை நெமிலிச்சேரி ஏரியை பொதுமக்கள் நேற்று ஒன்று திரண்டு தூய்மைப் படுத்தினர்.
பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட குரோம்பேட்டை அருகே நெமிலிச்சேரி ஏரி உள்ளது. குரோம்பேட்டை பாரதிபுரம் முதல் அஸ்தினாபுரம் நேதாஜி நகர் வரை, பரந்து விரிந்து காணப்பட்ட இந்த ஏரி, பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
ஒரு காலத்தில், இந்த ஏரியை நம்பி விவசாயம் நடந்தது. பின், காலப்போக்கில் குடியிருப்புகளின் அதிகரிப்பால், விவசாயம் தடைப்பட்டு, நிலத்தடி நீருக்கு மட்டுமே பயன்பட்டது. இதை சாதகமாக்கிக் கொண்ட அரசியல்வாதிகள், ஏரியை ஆக்கிரமித்து, `பிளாட்' போட்டு விற்பனை செய்தனர். தற்போது, ஏரி சுருங்கி குட்டை போல் ஆகிவிட்டது. மேலும், ஆகாயத் தாமரை செடிகள் வளர்ந்து, ஏரி என்றுஒன்று இருப்பதே தெரியாத அளவுக்கு மாறிவிட்டது. கழிவு நீரும் கலப்பதால், நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுவதோடு, நிலத்தடி நீரும் மாசடைந்து விட்டது.
இந்நிலையில், பல்லாவரம் நகர குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில், நெமிலிச்சேரி ஏரியை தூய்மை செய்யும் பணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதை ஏற்று, நேற்று காலை முதல் சிட்லபாக்கம் ரைசிங், பார்வதி மருத்துவமனை ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் பொதுமக்கள் என 150-க்கும் மேற்பட்டோர் ஏரியில் திரண்டு, தூய்மை பணியை மேற்கொண்டனர்.
பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட், பாட்டில்கள் மற்றும் பல்வேறு கழிவுகள் அகற்றப்பட்டன. மேலும் ஜேசிபி இயந்திரம் மூலமும், ஏரி தூய்மைப்படுத்தப்பட்டது. இங் கிருந்து சேகரிக்கப்பட்ட குப்பை கள் அனைத்தும் நகராட்சி குப்பை லாரிகள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன.