Published : 20 Sep 2024 05:09 AM
Last Updated : 20 Sep 2024 05:09 AM
சென்னை: சென்னையில் ஈரடுக்கு அதிவிரைவு மேம்பால தூண்கள் அமைக்க கூவம் ஆற்றில் கொட்டப்பட்டுள்ள கட்டிடக் கழிவுகளை, செப்.30-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மதுரவாயல் - துறைமுகம் வரை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் ஈரடுக்கு அதிவிரைவு மேம்பால சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கூவம் ஆற்றில் தூண்கள் அமைக்கப்படுகின்றன. இதற்காக கூவம் ஆற்றில் கட்டுமானக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.
இதனால் பருவமழை காலத்தில் நீர் செல்வது பாதிக்கப்பட்டு சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதன்அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் நேற்று (செப்.19) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பு வழக்கறிஞர் சண்முகநாதன் ஆஜராகி, “இத்திட்டத்துக்கு அனுமதி அளிக்கும்போது, ஆற்றின் குறுக்கே கட்டிட கழிவுகளை கொட்டுவதால் நீரோட்டத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் மூலம் ஆய்வு மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நிபந்தனைகளை ஆணையம் பின்பற்றவில்லை. வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டால் ஆற்றின் நீரோட்டம் பாதிக்கப்படும்” என்று வாதிட்டார்.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தரப்பில், “வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே கட்டுமானக் கழிவுகள் அகற்றப்படும்” என்று உறுதியளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பின்பற்றாவிட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தீர்ப்பாயத்தில் நீர்வள ஆதாரத் துறை முறையிடுவது ஏன்? செப்.30-ம் தேதிக்குள் ஆற்றில் கொட்டிய கட்டிடக் கழிவுகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அகற்ற வேண்டும்.
இதை அக்.1-ம் தேதி நீர்வள ஆதாரத் துறை ஆய்வு செய்து, முறையாக கட்டிடக் கழிவுகளை அகற்றியுள்ளதா என அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு வழக்கின் விசாரணை அக்.3-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT