

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும், ‘நவராத்திரி கொலு - 2024’ கொண்டாட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக ஆளுநர் மாளிகையில் ‘நவராத்திரி கொலு - 2024’ அக்டோபர் 3-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை ஆளுநர் ஆர்.என்.ரவி. அக்.3-ம் தேதி தொடங்கிவைக்கிறார்.
தினசரி மாலை 4 முதல் 5 மணிவரை வழிபாடு நிகழ்ச்சியும், 5 முதல் 6 மணிவரை கலாச்சார நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதில், தனிநபர்கள் மற்றும் பள்ளி, மாணவ மாணவிகள் பங்கேற்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை rbnavaratrifest@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செப்.30-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தில், பெயர், வயது, பாலினம், முகவரி, கைப்பேசி எண், வருகைதேதி மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று போன்றவிவரங்கள் இருக்க வேண்டும்.
`முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் நாள்தோறும் அதிகபட்சமாக 150 பேருக்கு அனுமதி வழங்கப்படும்.விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தை உறுதிப்படுத்தும் மின்னஞ்சல் அனுப்பப்படும்.
பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்துக்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக, ஆளுநர் மாளிகை இரண்டாம் நுழைவாயில் வழியாக வந்தடைய வேண்டும். தங்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலின் நகல், அசல் புகைப்பட அடையாளச் சான்றை உடன் கொண்டுவர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.