Published : 19 Jun 2018 12:21 PM
Last Updated : 19 Jun 2018 12:21 PM

காவிரி விவகாரத்தில் குமாரசாமியோ நாராயணசாமியோ முடிவெடுக்க முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் குமாரசாமி எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாது எனவும், அந்த விவகாரத்தில் பிரதான சாமி உச்ச நீதிமன்றம் தான் எனவும், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் விவரம்:

கர்நாடக முதல்வர் குமாரசாமி காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். காவிரி பிரச்சினைக்கு தீர்வு இல்லையா?

காவிரி விவகாரத்தில் இனி கட்டப் பஞ்சாயத்து தேவையில்லை. அந்த நிலைமையைத் தாண்டியாகி விட்டது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய முழு பொறுப்பும், கடமையும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உண்டு. இதில், மநில அரசின் பங்கை விட ஆணையத்தின் பங்கு தான் அதிகம். நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் என்பதற்கெல்லாம் இங்கே வழியில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றும் என நம்பிக்கை உள்ளது. குமாரசாமியோ, நாராயணசாமியோ எந்த சாமியும் ஆணையிட முடியாது. பிரதான சாமி காவிரி மேலாண்மை ஆணையம் தான். உச்ச நீதிமன்ற தீர்ப்பு தான் அருள்வாக்கு.

கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அதிமுகவில் இணையத் தயாராக இருப்பதாக நமது அம்மா நாளிதழில் செய்தி வெளியாகியிருக்கிறதே?

கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அடிமட்டத் தொண்டர்கள் என யாராக இருந்தாலும் எம்ஜிஆர், ஜெயலலிதாவைத் தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள் நிச்சயமாக கட்சிக்கு திரும்புவார்கள். அதுதான் காலத்தின் கட்டாயம். கட்சிக்குள் மீண்டும் வந்தே தீர்வார்கள்.

டிடிவி தினகரன் தரப்பு எம்எல்ஏக்களிடம் கட்சித் தலைமை பேச்சுவார்த்தை நடத்துகிறதா? யார், யாரிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறது?

அது ரகசியமானது. தற்போதைக்கு சொல்ல முடியாது.

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரை சந்திப்பதை பிரதமர் நிராகரிக்கிறாரா? கர்நாடக முதல்வர் குமாரசாமி பிரதமரை சந்தித்திருக்கிறாரே?

கர்நாடக முதல்வர் பிரதமரைச் சந்தித்தாலும் அது வீண் தான். கர்நாடக முதல்வர் சந்திப்பால் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி எதையேனும் செய்ய முடியுமா? அவர் சீன் வேண்டுமானால் போடலாம். அதனால் ஒரு பிரயோஜனமும் கர்நாடகத்திற்கு ஏற்படாது. காவிரி மேலாண்மை ஆணையம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றும். இதுகுறித்து பலமுறை மத்திய அரசிடம் வலியுறுத்தி விட்டோம். பிரதமரை முதல்வர் சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது.

அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதா தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

அந்தச் சட்டம் மாநில உரிமைகளை மீறுவதாக உள்ளது. அதனால், மாநில அரசுகளின் கருத்தைக் கேட்டுதான் சட்டத்தை செயல்படுத்த வேண்டும் என முதல்வர் டெல்லியில் வலியுறுத்தியிருக்கிறார்.

சேலம்-சென்னை 8 வழி பசுமை விரைவு சாலை திட்டத்திற்கு எதிராக பேசுபவர்களை காவல்துறையினர் தொடர்ந்து கைது செய்கின்றனர். சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மானுஷ் கைது செய்யப்பட்டிருக்கிறாரே?

மக்கள் அமைதியாக வாழ்வதற்கு காவல்துறை முக்கியம். சட்டத்தை மதிக்க வேண்டும். இது கற்காலம் அல்ல. சட்டங்கள், விதிமுறைகள் உள்ளன. ஒரு மாநிலம், நாடு, குடிமக்கள் எப்படி செயல்பட வேண்டும் என வரையறைகள் இருக்கின்றன. யாரும் சட்டத்திற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. மக்களைத் தூண்டுவதாகவோ அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகவோ இருந்தால் தான் காவல்துறை கைது செய்வர். தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. யாரையாவது கைது செய்திருக்கிறோமா? பொது அமைதிக்கு ஊறு விளைவிப்பதை அரசு ஏற்காது. மக்களின் ஒருமித்த கருத்தின்படியே எல்லா திட்டங்களும் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x