‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மக்கள் தேர்வு உரிமைக்கு எதிரானது: முத்தரசன் கண்டனம்

இரா.முத்தரசன் | கோப்புப்படம்
இரா.முத்தரசன் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: “விகிதாச்சார மக்கள் பிரதிநிதித்துவ தேர்தல் முறை வேண்டும் என ஜனநாயக சக்திகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதை புறக்கணித்துள்ள மத்திய அரசு, நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புகளின் அடிப்படைகளை தகர்க்கும் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பது கண்டனத்துக்குரியது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடும், மக்களும் ஏற்றுக் கொண்டுள்ள அரசியல் அமைப்பு சட்டம் உறுதி செய்துள்ள மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சி முறையை திருத்தி, “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற புதிய முறையை அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை இன்று (செப்.18) ஒப்புதல் வழங்கியிருப்பது அரசியல் அமைப்பு சட்டத்தை சிறுமைப் படுத்துவதாகும். நவ தாராளமயக் கொள்கையின் எதிர்மறை விளைவாக தேர்தல் களம் அதிகாரம், பணபலம், கும்பல் ஆதிக்கம் போன்றவைக்கு ஆளாகியுள்ளது. அது நாளுக்குநாள் அதிகரித்தும் வருகிறது.

அரசியல் அமைப்பு சட்டத்தின் அதிகாரம் பெற்று, தற்சார்பு நிலையில் இயங்கி வரும் தேர்தல் ஆணையத்தின் சார்பற்ற, நடுநிலையில் அவ்வப்போது சந்தேக நிழல்கள் படிந்து வருகின்றன. இருப்பினும் நமது நாடாளுமன்ற முறையில் மக்களுக்கே இறுதி அதிகாரம் என்ற அடிப்படை பண்பு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அதிகார பலம், பணபலம், குற்றப்பின்னணி கொண்டோர் தேர்தல் களத்தில் தலையிட்டு, சுதந்திரமான, நியாயமான தேர்வுரிமையை தடுத்து வருவதை முற்றிலுமாக நீக்க, மக்கள் உணர்வுகளை துல்லியமாக பிரதிபலிக்கும் முறையில் “விகிதாச்சார மக்கள் பிரதிநிதித்துவ தேர்தல் முறை வேண்டும்” என ஜனநாயக சக்திகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதை மத்திய அரசு புறக்கணித்துள்ளது.

இது மக்களின் உணர்வுக்கு மாறானது, அரசியல் அமைப்பு சட்டம், குடிமக்களுக்கு வழங்கியுள்ள தேர்வு உரிமைக்கு எதிரானது. நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புகளின் அடிப்படைகளை தகர்க்கும் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டிப்பதுடன், அதனை திருப்பப் பெற ஜனநாயக சக்திகள் இணைந்து போராட முன் வர வேண்டும் என அழைக்கிறது,” என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in