Published : 18 Sep 2024 05:56 AM
Last Updated : 18 Sep 2024 05:56 AM

நாம் தமிழர் கட்சிக்கு தலைமை வகிக்கும் தகுதியை முற்றிலும் இழந்துவிட்டார் சீமான்: திருச்சியில் நிர்வாகிகள் குற்றச்சாட்டு

திருச்சியில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள். படம்: ஆர்.வெங்கடேஷ்

திருச்சி: நாம் தமிழர் கட்சிக்கு தலைமைவகிக்கும் தகுதியை சீமான் இழந்துவிட்டதாக அக்கட்சியின் நிர்வாகிகள் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர்.

நாதக திருச்சி மண்டலச் செயலாளர் இரா.பிரபு தலைமையில், வழக்கறிஞர் பாசறைப் பொறுப்பாளர் மைக்கேல் ஆரோக்கியராஜ், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் ச.முருகேசன், முன்னாள் நிர்வாகிகள் எம்.ஜாபர் சாதிக், மதுரை வெற்றிக்குமரன், தனசேகரன், சர்வத்கான், ஏ.தேவராஜ் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் திருச்சியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்வாதிகாரத்துடன் நடந்துகொள்கிறார். அவரது பேச்சுக்கும், செயலுக்கும் சம்பந்தம் இல்லை. தமிழ் தேசிய உணர்வாளர்களின் உழைப்பைச் சுரண்டி, சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவருகிறார். கட்சிக்கென எந்த சட்டதிட்டமும் கிடையாது.

நிர்வாகிகள் யாரையும் சுயமாக செயல்பட சீமான் அனுமதிப்பதில்லை. ‘ஒன் மேன் ஆர்மி’யாக இருக்க அவர் விரும்புவதால்தான் கடந்த தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தை இழந்தோம். கட்சியில் தன்னைத் தாண்டி யாருமே பிரபலமாகிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். அப்படி யாராவது வளர்ந்தால், அவர்களை திட்டமிட்டு காலி செய்துவிடுகிறார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, அங்குள்ள தமிழர்களுக்காக பணம், பொருள் வசூல் செய்து கொடுத்தோம். அவை இதுவரை அவர்களைச் சென்று சேரவில்லை. தமிழ் தேசிய அரசியலை ஏற்றுக்கொண்ட எங்களால், இனியும் சீமானுக்கு அடிமையாக இருக்க முடியாது. சீமான் இதுவரை கட்சியை விட்டு பலரை நீக்கியுள்ளார். அதற்கான காரணத்தை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

நாம் தமிழர் கட்சிக்கு தலைமை வகிக்கும் தகுதியை சீமான் இழந்துவிட்டார். தற்போது தமிழ் தேசிய அரசியலுக்கு மாற்றுத் தலைமை தேவைப்படுகிறது. கன்னியாகுமரியில் மலைப் பாறைகளை வெட்டி கேரளாவுக்கு கடத்திச் செல்லும் மணல் மாஃபியாக்களுக்கு எதிராக நாதகவினர் போராட்டம் நடத்தினர். பின்னர்,கிடைக்க வேண்டியது கிடைத்தவுடன், இந்த விவகாரத்தில் போராட்டம் நடத்த கட்சியினரை சீமான் அனுமதிக்கவில்லை. எனவே, கட்சியில் உள்ள உட்கட்சிப் பிரச்சினைகளை சீமான் சரிசெய்ய வேண்டும். இல்லையெனில் எங்களைப்போல மேலும் பல நிர்வாகிகள் மாற்று இயக்கங்களை தேடிச் செல்வதை தவிர்க்க முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x