

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான கருணாநிதி ஆரோக்கியமான உடல்நலத்துடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் மற்றும் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீடு விழாக்கோலம் பூண்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த பிறந்த நாளை ஜூன் மாதம் முழுவதும் கொண்டாடுமாறு திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடியும் கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''திமுக தலைவர் கருணாநிதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் சிறந்த எழுத்தாளர், கவிஞர், சிந்தனையாளர், பேச்சாளர். இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான கருணாநிதி ஆரோக்கியமான உடல்நலத்துடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகள்'' என்று மோடி தெரிவித்துள்ளார்.