"திமுக கூட்டணியில் இரண்டு நாளில்கூட மாற்றம் ஏற்படலாம்” - விஜய பிரபாகரன் கணிப்பு

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விஜயபிரபாகரன்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விஜயபிரபாகரன்.
Updated on
1 min read

திருச்சி: பெரியாரின் 146-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு, தேமுதிக நிறுவனர் மறைந்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ''வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தேமுதிக அதிமுக கூட்டணியில் தொடரும். திமுக கூட்டணியில் 2 நாட்களில் கூட மாற்றம் ஏற்படலாம். தேர்தலை சந்திப்பதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் அவகாசம் உள்ளதால், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு எனது வாழ்த்துகள். மது ஒழிப்பு மாநாட்டுக்கு தேமுதிகவுக்கு அழைப்பு வந்தால் அதில் பங்கேற்பது குறித்து தலைமை முடிவு செய்யும்.

புதிய கட்சி தொடங்கி உள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள். பாஜகவினர் கோயம்புத்தூர் அன்னபூர்ணா உரிமையாளரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்தார்களா அல்லது அவர் தானாகச் சென்று மன்னிப்புக் கேட்டாரா என்பது தெரியாது. அது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும்'' என்று அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் திருச்சி மாநகர் டி.வி.கணேஷ், தெற்கு ஆர்.பாரதிதாசன், வடக்கு குமார், அவைத் தலைவர் வி.கே.ஜெயராமன், பொருளாளர் மில்டன் குமார், துணைச் செயலாளர்கள் பிரீத்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in