கால்நடை மருத்துவ படிப்பு: மூன்றாம் பாலினத்தவர் விண்ணப்பத்தை பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

கால்நடை மருத்துவ படிப்பு: மூன்றாம் பாலினத்தவர் விண்ணப்பத்தை பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மூன்றாம் பாலினத்தவரின் விண்ணப்பத்தை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நிவேதா என்ற மூன்றாம் பாலினத்தவர் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் நடப்பு கல்வியாண்டுக்கான (2024-25) இளநிலை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான விளக்க குறிப்பேட்டில் மூன்றாம் பாலினத்தனவர்களை சிறப்பு பிரிவாக வகைப்படுத்தவில்லை. இதனால் எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மூன்றாம் பாலினத்தவர் என்ற காரணத்துக்காக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், நடப்பு கல்வியாண்டுக்கு சேர்க்கை கோரி விண்ணப்பித்துள்ள எனது விண்ணப்பத்தை பரிசீலித்து, மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் எனக்கு சேர்க்கை வழங்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம். தண்டபாணி முன்பாக இன்று (செப்.17) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கே.வி. சஜீவ்குமார், “கால்நடை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கோரி மனுதாரர் சமர்ப்பித்துள்ள விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட்டாலே போதுமானது” எனக் கோரினார். அதற்கு மருத்துவ கல்வி இயக்குநரகம் மற்றும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் எம்.சினேகா, கே.கங்காதரன் ஆகியோர் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “மூன்றாம் பாலினத்தவர் என்ற காரணத்துக்காக மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரித்தது தவறு. எனவே, மனுதாரரின் விண்ணப்பத்தை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை குழு இரு வாரங்களில் பரிசீலிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in