‘‘சமத்துவ உலகை நிறுவுவதே நமது தலையாய பணி’’ - பெரியார் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை: இன்று உலகம் முழுவதும் தமிழர்கள் உயர்ந்த நிலைகளில் இருப்பதற்கு, தந்தை பெரியாரின் சிந்தனையும் உழைப்புமே அடித்தளம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பெரியாரின் 146வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்குகீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி. ஆர்.பாலு எம்.பி., கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இந்நிலையில், இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “புரட்டுக் கதைகளுக்கும் - வறட்டு வாதங்களுக்கும் வளைந்து கொடுக்காதீர்கள். எல்லாவற்றுக்கும் மேலானது சுயமரியாதை என இனமான உணர்வூட்டி நிமிர்நடை போட வைத்த பகுத்தறிவுப் பகலவனுக்குப் புரட்சி வணக்கம்!

இன்று உலகம் முழுவதும் தமிழர் உயர்ந்த நிலைகளில் இருப்பதற்கு, தந்தை பெரியாரின் சிந்தனையும் உழைப்புமே அடித்தளம். ஆயிரமாண்டு மடமையைப் பொசுக்கிய அவரது அறிவுத்தீதான், நமது பாதைக்கான வெளிச்சம். அந்த வெளிச்சத்தில் சமத்துவ உலகத்தை நிறுவுவதே நமது தலையாய பணி” எனப் பதிவிட்டுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தனது எக்ஸ் தளத்தில், “சாதியவாதத்தை, மதவாதத்தை கூரிய கருத்துக்களால் நொறுக்கிய கேள்வித் தடி தந்தை பெரியாரின் தடி. சமத்துவம், சமூகநீதி, பெண் விடுதலை ஆகிய உயரிய கோட்பாட்டு வேள்விகளை நம்மில் விதைத்த அவர்தம் பிறந்தநாளில், அடிப்படைவாதத்திற்கு துளியும் இடமின்றி, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பொதுவுடைமைச் சமூகத்தை கட்டமைக்க உறுதியேற்போம். தந்தை பெரியாரின் புகழ் ஓங்குக” எனப் பதிவிட்டுள்ளார்.

பெரியாரின் பிறந்தநாளையொட்டி தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது உருவச் சிலைக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in