Published : 23 Aug 2014 09:19 AM
Last Updated : 23 Aug 2014 09:19 AM

மாணவர்களை வெட்டுவதற்கு கத்தியுடன் துரத்திய மாணவர்கள்: அண்ணாசாலையில் பரபரப்பு சம்பவம்

மாநிலக் கல்லூரி மாணவர்களை வெட்டுவதற்காக நந்தனம் கல்லூரி மாணவர்கள் கத்தியுடன் அண்ணாசாலையில் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல் சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த ஆண்டு மட்டும் இதுபோன்ற மோதல் சம்பவங்கள் தொடர்பாக 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் சென்னை அண்ணாசாலையில் இரு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை அண்ணாசாலை காசினோ தியேட்டர் அருகில் பிளாக்கர்ஸ் சாலை சந்திப்பில் நந்தனம் கலைக் கல்லூரி மாணவர்கள் ‘18கே’ பஸ்ஸில் வந்து இறங்கினர். சிறிது நேரத்தில் மாநிலக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சிலர் ‘27எல்’ பஸ்ஸில் அங்கு வந்தனர். அப்போது இரு தரப்பு மாணவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. 2 கல்லூரி மாணவர்களும் திரண்டு மோதலில் ஈடுபடும் தகவல் கிடைத்ததும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அந்த நேரத்தில் நந்தனம் கலைக் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கையில் கத்தியை எடுத்துக் கொண்டு மாநிலக் கல்லூரி மாணவர்களை விரட்டினர். பரபரப்பான அண்ணாசாலையில் நடைபெற்ற இச்சம்பவத்தைக் கண்டு பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போய்விட்டனர்.

இதைத் தொடர்ந்து ரோந்து போலீஸார் குணசேகரன், தெய்வீகன் ஆகிய இருவரும் துணிச்சலுடன் மாணவர்களை விரட்டிச் சென்றனர். போலீஸார் விரட்டுவதை பார்த்ததும் நந்தனம் கல்லூரி மாணவர்கள் ஆளுக்கொரு திசையாக பிரிந்து தப்பிச்சென்றனர். ஆனால் போலீஸார் தொடர்ந்து விரட்டிச் சென்று ஒரு மாணவரை மடக்கிப் பிடித்தனர். அவரது பெயர் பார்த்தசாரதி (19). எம்.கே.பி. நகரை சேர்ந்த இவர் நந்தனம் கலைக் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படிக்கிறார். அவரிடம் இருந்து 2 அடி நீள கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. மாணவர் பார்த்தசாரதியின் நண்பர்களான மற்ற 6 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

தப்பி ஓடிய மணி, சுதர்சன், திவாகர், குரு, பிரவீன் ஆகிய 5 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x