Published : 17 Sep 2024 06:30 AM
Last Updated : 17 Sep 2024 06:30 AM
திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது. இவ்விழாவில் பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் பெயர்களிலான விருதுகள், கட்சியில் சிறப்பாக செயல்பட்டோருக்கான பரிசுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி உரையாற்றுகிறார்.
செப்.15-ம் தேதி முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த தினம், செப்.17-ம் தேதி தந்தை பெரியார் பிறந்த நாள், அதே செப்.17-ம் தேதி திமுக தொடங்கப்பட்ட நாளாகும். ஆகியவற்றை இணைத்து ஆண்டுதோறும் முப்பெரும் விழா திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தாண்டு, திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பவளவிழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது. எனவே, திமுக பவளவிழா மற்றும்முப்பெரும் விழா இன்று, சென்னைநந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
தென்சென்னை மாவட்ட திமுக சார்பில் மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவுக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். இவ்விழாவில் பெரியார் விருதை பாப்பம்மாளுக்கும் அண்ணா விருது-அறந்தாங்கி மிசா ராமநாதனுக்கும் கலைஞர் விருது- ஜெகத்ரட்சகனுக்கும் பாவேந்தர் விருது - கவிஞர் தமிழ்தாசனுக்கும், பேராசிரியர் விருது- வி.பி.ராஜனுக்கும் ஸ்டாலின் வழங்குகிறார். இதேபோல் பவளவிழா ஆண்டில் புதிதாக மு.க.ஸ்டாலின் பெயரிலும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை முதல்வரிடம் இருந்து எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பெறுகிறார்.
இதுதவிர, கட்சியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பணமுடிப்பை முதல்வர்ஸ்டாலின் வழங்குகிறார். அந்தவகையில், ஒன்றியம், நகரம், பகுதி,பேரூர் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு வரும் கட்சி நிர்வாகிகளுக்கு பணமுடிப்பு வழங்கப்படுகிறது. மண்டல அளவில் 4 பேர்வீதம் 16 பேருக்கு இந்த பணமுடிப்பு வழங்கப்படுகிறது. விருது மற்றும் பணமுடிப்பை வழங்கியபின் ஸ்டாலின் உரையாற்றுகிறார்.
விழாவில், துணை பொதுச்செயலாளர்கள் க.பொன்முடி, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். தென்சென்னைதெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிமணியன் வரவேற்புரையாற்றுகிறார்.
இந்த விழாவில், தமிழகம் முழுவதிலிருந்தும் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, நேற்று மாலை முதலே தொண்டர்கள் வரத்தொடங்கிவிட்டனர். இதையடுத்து, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் அமரும் வகையில், பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் விழாவை முழுமையாக காணும் வகையில் பெரியஅளவிலான டிஜிட்டல் திரைகளும்ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், 75 அடி உயர கொடிக் கம்பத்தில் கட்சி கொடியை ஸ்டாலின் ஏற்றுகிறார். விழா நடைபெறும் வளாகத்தில் 75 ஆண்டு திமுகவரலாற்றை விளக்கும் 100 அடிகட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, சென்னை அண்ணா அறிவாலயம், அன்பகம் ஆகிய திமுக அலுவலகங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பொன்விழா இலச்சினை லேசர் ஒளி விளக்குகளால் ஒளிர்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT