Published : 08 Aug 2014 09:30 AM
Last Updated : 08 Aug 2014 09:30 AM

நெல் பயிரிடும் நாடுகளின் கையில்தான் எதிர்காலம்: எம்.எஸ்.சுவாமிநாதன் பேச்சு

உணவுத் தேவை பல மடங்கு அதிகரிக்கப்போகிறது. எனவே, வரப்போகும் காலம் ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகளின் கையில் இல்லை. அது நெல் வைத்திருக்கும் நாடுகளிடம் உள்ளது என்று எம்.எஸ்.சுவாமிநாதன் கூறினார்.

குடும்பத்தில் உள்ள அனைவரும் விவசாயத் தொழிலில் ஈடுபடுவது இந்தியாவில் அதிகம். வறுமை ஒழிப்பு மற்றும் உலக அளவில் உணவுப் பாதுகாப்புக்கு உழைப்பதில் இவர்களது பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. குடும்ப விவசாயத்தைப் போற்றும் விதமாக 2014-ம் ஆண்டை சர்வதேச குடும்ப விவசாய ஆண்டாகக் கொண்டாடுமாறு ஐ.நா. கூறியுள்ளது.

இதைக் கொண்டாடும் விதமாக சென்னை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆசிய பசிபிக் நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட சர்வதேச கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் துவக்கவிழாவில் எம்.எஸ்.சுவாமிநாதன் கூறியதாவது:

இந்தியாவில் 1.5 லட்சம் நெல் வகைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதற்கு காரணம் குடும்ப விவசாயிகள். ஒடிஸா மாநிலப் பழங்குடியினர் 3 ஆயிரம் நெல் வகைகளைப் பராமரித்து வருகின்றனர். உலக அளவில் 2004-ம் ஆண்டில் தேவைப்பட்ட நெல் அளவை விட 50% அதிகமாக 2030-ம் ஆண்டில் தேவைப்படும். எனவே, வரப்போகும் காலம் ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகளின் கையில் இல்லை. அது நெல் வைத்திருக்கும் நாடுகளிடம் உள்ளது. மியான்மரில் உயிரி நெல் பூங்கா இன்னும் 2 மாதத்தில் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிறு விவசாயிகள் வேளாண் கூட்டமைப்பைச் சேர்ந்த டாக்டர் பிரவேஷ் சர்மா கூறும்போது, ‘‘இந்தியாவில் 14 கோடி விவசாய குடும்பங்கள் 20 லட்சம் ஹெக்டேர்களில் பயிரிட்டு வருகின்றன. பொதுவாக கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிகம் இருக்கும் வளர்ந்த நாடுகளில்கூட குடும்ப விவசாயிகளை பாரம்பரிய அறிவு கொண்டவர்களாக கருதி, அவர்களைப் பாதுகாக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

‘ஐ.நா. மகளிர்’ அமைப்பின் பிராந்திய பிரதிநிதி டாக்டர் ரெபெக்கா ரீச்மென் தவரஸ் கூறும்போது, ‘‘விவசாயத் தொழிலாளர்களில் 43% பேர் பெண்கள். அவர்களில் 50% பேர் சம்பளம் இல்லாமல்தான் வேலை பார்க்கிறார்கள். பெண்களை விவசாயிகளாக அங்கீகரிக்காததால், விவசாயம் செய்யும் 9% பெண்களுக்கு மட்டுமே சொந்த நிலம் இருக்கிறது’’ என்றார்.

தொடக்க விழாவில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் மதுரா சுவாமிநாதன், செயல் இயக்குநர் அஜய் கே.பரிடா ஆகியோர் நிறுவனத்தின் செயல்பாடுகளை விளக்கினர். எம்.எஸ்.சுவாமிநாதன் 2014-ம் ஆண்டு அறிக்கையை வெளியிட்டு, பாரம்பரிய பயிர்களின் கண்காட்சி மற்றும் விற்பனையை தொடங்கிவைத்தார்.

இக்கருத்தரங்கில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, கம்போடியா, நேபாளம், மங்கோலியா, ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x