

கோவில்பட்டி: எழுத்தாளர் கி.ரா.வின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் ஆட்சியர் மரியாதை செலுத்தினார்.
கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் என்றழைக்கப்படும் கி.ராஜநாராயணின் பிறந்த நாள் விழா அரசு விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. அவரது 102-வது பிறந்த நாளான இன்று (செப்.16) கோவில்பட்டி நினைவரங்கில் உள்ள கி.ரா.வின் முழு உருவ வெண்கல சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கோட்டாட்சியர் மகாலட்சுமி, நகர்மன்ற தலைவர் கருணாநிதி, நகராட்சி ஆணையர் கமலா, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் உள்ளிட்டோர் கி.ரா. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் கி.ரா.வின் மகன்கள் பிரபாகர், திவாகர் ஆகியோரை ஆட்சியர் கவுரவித்தார். தொடர்ந்து, கி.ரா. நினைவரங்கத்தில் உள்ள டிஜிட்டல் நூலகம், அவர் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் எழுதிய புத்தகங்கள் ஆகியவற்றை ஆட்சியர் பார்வையிட்டார். இதேபோல், சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் செ.ராஜூ, எழுத்தாளர் கி.ரா.வின் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், நகர அதிமுக செயலாளர் விஜயபாண்டியன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சங்கர் கணேஷ், நகர்மன்ற உறுப்பினர் கவியரசன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சத்யா, அதிமுக ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜ், அழகர்சாமி, கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.