சென்னையில் 3 இடங்களில் பாதசாரிகளுக்கு இடையூறு இன்றி மாதிரி சாலையோர வியாபார வளாகங்கள்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: சென்னையில் 3 இடங்களில், பொதுமக்களுக்கு இடையூறு இன்றி மாதிரி சாலையோர வியாபார வளாகங்களை ஏற்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளின் நலனை காக்கவும், சாலையோர வியாபாரத்தை ஒழுங்குபடுத்தவும் மாநகராட்சி சார்பில் நகர விற்பனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளார். மாநகரம் முழுவதும் 35 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்களின் மூலம் அவர்கள் பயன்பெறவும் மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நகர விற்பனைக் குழு உறுப்பினர்கள் தேர்தலும் கடந்த ஆண்டு நடந்து முடிந்தது.

சாலையோர வியாபாரம் அனுமதிக்கப்பட்ட பகுதி, தடை விதிக்கப்பட்ட பகுதிகளை அடையாளம் காணுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும், வட்டாரத்துக்கு ஒன்று வீதம் 3 மாதிரி சாலையோர வியாபார வளாகங்களை உருவாக்கவும் அறிவுறுத்தி இருந்தார்.

அதன்படி, வட சென்னையில் மகாகவி பாரதி நகர், மத்திய சென்னையில் அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்டபார்க் சாலை, தென் சென்னையில் பெசன்ட் நகர் 2-வது நிழல் சாலை ஆகிய இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்பகுதியை மாதிரி வியாபார வளாகங்களாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மகாகவி பாரதி நகரில் நடைபாதையை சமமாக பிரித்து, ஒரு பகுதியில் வியாபாரிகள் கடை வைக்கவும், ஒரு பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லவும் வழிவகை செய்யும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அம்பத்தூர் பகுதியில் நடைபாதையில் கடை வைக்கும் பகுதிகள் வண்ணம் தீட்டப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், மண்டலத்துக்கு ஒருமாதிரி வியாபார வளாகங்களை அமைப்பதற்கான பகுதிகளை தேர்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஆணையர் அறிவுறுத்தி இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in