சென்னை 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: பார்க்கிங் வசதிக்கு கூடுதலாக 10 ஏக்கர்!

சென்னை 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: பார்க்கிங் வசதிக்கு கூடுதலாக 10 ஏக்கர்!
Updated on
1 min read

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் கோயம்பேடு, பட்ரோடு, பூந்தமல்லி, சோழிங்கநல்லுார், சிறுசேரி உள்ளிட்ட இடங்களில் கூடுதல் பார்க்கிங் வசதிக்காக, 10 ஏக்கருக்கும் அதிகமான இடங்களை தேர்வு செய்ய மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில்களில் தினசரி 2.60 லட்சம் முதல் 3 லட்சம் பேர் வரை பயணிக்கின்றனர். முக்கிய ரயில் நிலையங்களில் காலை, மாலை வேளைகளில் கூட்டம் நிரம்பிவழிகிறது. பயணிகள் தங்கள் வாகனங்களை ரயில் நிலையங்களின் பார்க்கிங்பகுதிகளில் நிறுத்திவிட்டு, செல்லும் வசதி உள்ளது. இருப்பினும், சில நிலையங்களில் வாகன நிறுத்தங்களில் இடநெருக்கடி இருக்கிறது. குறிப்பாக ஆலந்துார், விமான நிலையம், சைதாப்பேட்டை, ஆயிரம்விளக்கு உள்ளிட்ட நிலையங்களில் காலை 10 மணிக்கே பார்க்கிங் பகுதி நிரம்பிவழிகிறது.

இதற்கிடையில், இரண்டாவது கட்டமாக 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள்முழு வீச்சில் நடைபெறுகின்றன. மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதைகளில் என 120-க்கும் மேற்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. அனைத்து நிலையங்களிலும் வாகன நிறுத்த வசதி இருக்கும். இதுதவிர, ரயில் நிலையங்கள் அருகே வாகன நிறுத்தும் வசதிக்காக கூடுதல் இடங்களை மெட்ரோ நிறுவனம் தேடுகிறது.

இது குறித்து சென்னை மெட்ரோரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. சில, மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தங்களில் உள்ள பிரச்சினைக்கு படிப்படியாக தீர்வுகாணப்படுகிறது. அருகே இருக்கும் இடங்களை வாங்கி வருகிறோம். மேலும், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்த இடங்களுக்கு பிரச்சினை ஏற்படாத வகையில், கூடுதல் இடங்களை தேர்வு செய்துவருகிறோம்.

இதன்படி, கோயம்பேடு, பட்ரோடு, பூந்தமல்லி பைபாஸ், சோழிங்கநல்லுார், சிறுசேரி, போரூர், திருமங்கலம், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் 10 ஏக்கருக்கும் அதிகமான இடங்களை தேர்வு செய்து, இறுதி செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in