Published : 16 Sep 2024 09:08 AM
Last Updated : 16 Sep 2024 09:08 AM
சென்னை: நண்பர்கள் தாக்கியதில், கோபம்அடைந்த இளைஞர் மதுபோதையில் ஏரிக்குள் இறங்கியதில் மாயமானார்.
சென்னை பெரும்பாக்கம், எழில் நகரைச் சேர்ந்தவர் விட்டல் பாண்டுரங்கன் (24). உணவு விநியோக ஊழியராக பணி செய்து வந்தார். இந்நிலையில், இவர் கடந்த 7-ம் தேதி பணிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் இதுகுறித்து மேடவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதில், சம்பவத்தன்று பாண்டுரங்கன், நண்பர்களான சென்னை அஸ்தினாபுரம் ராஜேஷ் (23), அதேபகுதி ரஞ்சித் (25), பல்லாவரம் பெத்தராஜன் (28), குரோம்பேட்டை ராம்குமார் (22), மேல்மலையனூர் தமிழரசன் (21) ஆகிய 5 பேருடன் குரோம்பேட்டை அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிச் சென்றதும், பின்னர் நன்மங்கலம் ஏரிக்கரைக்கு சென்றதும் தெரியவந்து. அதன் பிறகுதான் பாண்டுரங்கன் மாயமாகி உள்ளார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட நண்பர்கள் 5 பேரையும் பிடித்து போலீஸார் விசாரித்தனர்.
இதில், கடந்த 7-ம் தேதி நாங்கள் ஒன்றாக மது அருந்தினோம். அப்போது பாண்டுரங்கனுக்கும், தமிழரசனுக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. நாங்கள் விலக்கி விட்டும் இருவரும் கேட்கவில்லை. இதையடுத்து, அனைவரும் ஒன்றாக சேர்ந்து பாண்டுரங்கனை தாக்கினோம். இதனால், கோபமடைந்த அவர் நன்மங்கலம் ஏரிக்குள் இறங்கி விட்டார். நாங்கள் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை. இதையடுத்து, நாங்கள் அங்கிருந்து சென்று விட்டோம் என நண்பர்கள் 5 பேரும் போலீஸாரிடம் வாக்குமூலமாக தெரிவித்தனர்.
இதையடுத்து, பாண்டுரங்கனை மதுரவாயல் போலீஸார் தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் தேடினர். ஆனால், இதுவரை அவர் கிடைக்கவில்லை. அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுஒருபுறம் இருக்க மதுபோதையில் பாண்டுரங்கனை தாக்கியதாக அவரது நண்பர்கள் 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT