Published : 11 Jun 2018 09:50 AM
Last Updated : 11 Jun 2018 09:50 AM

ஓட்டேரியில் போலீஸார் மீது தாக்குதல்: 5 ரவுடிகள் கைது

ஓட்டேரியில் போலீஸார் மீது தாக்குதல் நடத்திய 5 ரவுடிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை ஓட்டேரி பிரிக்ளின் சாலை திடீர் நகர் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 10-க்கும் மேற்பட்ட ரவுடிகள் குழுமி இருந்தனர். அவர்கள் கஞ்சா புகைக்கும் பழக்கம் உடையவர்கள் என கூறப்படுகிறது. அப்பகுதியில் உள்ள சக்திவேல் என்பவரது வீட்டில் கஞ்சா வாங்குவதற்காக அவர்கள் வந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

போலீஸில் புகார்

கஞ்சா வாங்க வந்தவர்கள் திடீரென அப்பகுதி மக்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதை புஷ்பா என்ற மூதாட்டி தட்டிக் கேட்டுள்ளார். அப்போது அவர் மீது அந்த ரவுடிகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தலைமைச் செயலக காலனி போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

போலீஸாரைக் கண்டதால் ஆத்திரம் அடைந்த ரவுடிகள், போலீஸ் வாகனம் மீது கற்களை வீசினர். இதில் போலீஸ் வாகனம் சேதம் அடைந்தது. போலீஸார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அப்பகுதிக்கு கூடுதலாக போலீஸார் வரவழைக்கப்பட்டனர். அவர்களைக் கண்டவுடன் ரவுடிகள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

போலீஸார் அவர்களை விரட்டிச் சென்று சக்திவேல், சீனிவாசன், சிவா, கார்த்திக், பார்த்திபன் ஆகிய 5 பேரை பிடித்தனர். அவர்களை போலீஸார் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

காவல் ஆணையர் உத்தரவு

இதற்கிடையில் தலைமைச் செயலக சட்டம் ஒழுங்கு ஆய்வாளர், கஞ்சா கும்பலிடம் மாமூல் பெற்றுக்கொண்டு கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வ நாதன் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x