Published : 07 Jun 2018 08:41 AM
Last Updated : 07 Jun 2018 08:41 AM

பழநியில் வழிப்பறி திருடர்கள் அட்டகாசம்: கோவை தனிப்படை சப்-இன்ஸ்பெக்டருக்கு கத்திக்குத்து; பொதுமக்கள் உதவியுடன் 3 பேரை போராடி பிடித்தது போலீஸ்

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் வழிப்பறி திருடர்களை பிடிக்க முயன்ற கோயம்புத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். கடும் போராட்டத்துக்குப் பிறகு, பொதுமக்கள் உதவியுடன் 3 திருடர்களை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.

கோயம்புத்தூர் மதுக்கரை பகுதியில் கடந்த 31-ம் தேதி காரில் சென்ற ஒரு குடும்பத்தை மறித்த வழிப்பறி கும்பல் ஒன்று, 60 கிராம் தங்க நகைகள், ரூ.2 ஆயிரம், செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றது. இதுகுறித்து பேரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கோவை காரமடையைச் சேர்ந்த ஆஷிக்அகமது (25), மதுரையைச் சேர்ந்த விக்னேஷ் (25), பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வீரமணி (26) ஆகியோருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் தங்கப்பாண்டியன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகநயினார், போலீஸார் நவநீதகிருஷ்ணன், பிரபாகரன் ஆகியோரைக் கொண்ட தனிப்படை அமைத்து வழிப்பறி கும்பலை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட நபர்கள் 3 பேரும் கொடைக்கானல் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கொடைக்கானல் - பழநி சாலையில் அவர்களை நேற்று முன்தினம் இரவு போலீஸார் பின்தொடர்ந்தனர்.

அப்போது, பழநியில் காரை குறுக்கே நிறுத்தி அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் மின்னல் வேகத்தில் ஓட்டிச் சென்றனர். போலீஸாரும் காரில் பின்தொடர்ந்தனர்.

பழநி அடிவாரம் கிரி வீதி அருகே திருடர்கள் சென்ற கார் சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதி நின்றது. இதையடுத்து காரில் இருந்து இறங்கிய நபர்கள் கையில் கத்தி, அரிவாளுடன் தங்களை பிடிக்க வந்த போலீஸார் மீது அதிரடியாக தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகநயினாரின் வலது கை மற்றும் இடது கன்னத்தில் கத்திக்குத்து விழுந்தது.

இன்ஸ்பெக்டர் தங்கப்பாண்டியன் கூச்சலிட்டு அருகில் இருந்த பொதுமக்களை அழைத்ததால், அங்கிருந்த பொதுமக்கள் உதவிக்கு வந்தனர். இதையடுத்து பொதுமக்களுடன் சேர்ந்து 3 பேரையும் போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த பழநி போலீஸார் 3 பேரையும் காவல் நிலையம் கொண்டு சென்றனர். பலத்த காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகநயினார் பழநி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவிக்கு பின், மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் கொண்டு செல்லப்பட்டார்.

சம்பவத்தின்போது தப்பி ஓடிய கார்த்திக் என்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x