நீர்நிலைகளில் கட்டுமானக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க சென்னை மாநகராட்சி சார்பில் கண்காணிப்பு குழு அமைப்பு

சென்னை மாநகரப் பகுதிகளில் விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகள் கொட்டுவதை கண்காணிக்க வழங்கப்பட்டுள்ள மாநகராட்சி ரோந்து வாகனங்கள். 
சென்னை மாநகரப் பகுதிகளில் விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகள் கொட்டுவதை கண்காணிக்க வழங்கப்பட்டுள்ள மாநகராட்சி ரோந்து வாகனங்கள். 
Updated on
1 min read

சென்னை: நீர்நிலைகளில் கட்டுமானக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க மாநகராட்சி சார்பில் 3 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகரப் பகுதியில் பொதுமக்கள் விதிகளை மீறி, பொறுப்புணர்வு இன்றி ஆங்காங்கே கட்டுமான இடிபாட்டு கழிவுகளை கொட்டி வருகின்றனர். இது மாநகரப் பகுதியின் பொலிலை கெடுப்பதுடன், மழைநீர் வடிகால்களில் அடைப்பை ஏற்படுத்தி, வெள்ள பாதிப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக பக்கிங்ஹாம் கால்வாய் போன்ற நீர்வழித்தடங்களிலும் கட்டுமானக் கழிவுகளை கொட்டி வருகின்றனர்.

இவையும் மழைநீர் எளிதாக செல்ல முடியாமல் தடையை ஏற்படுத்துகின்றனர். இந்நிலையில் ஏற்கெனவே, மாநகராட்சியால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கட்டுமானக் கழிவுகளை கொட்ட வேண்டும். விதிகளை மீறி கட்டுமானக் கழிவுகளை பொது இடங்கள் மற்றும் நீர்நிலைகளில் கொட்டினால் ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

விதிகளை மீறி யாரேனும் கட்டுமானக் கழிவுகளை கொட்டினால், அது தொடர்பாக 1913 என்ற மாநகராட்சியின் தொலைபேசி புகார் எண்ணை தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும் மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அவ்வாறு கிடைக்கப்பெறும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும், விதிகளை மீறி அடிக்கடி கட்டுமானக் கழிவுகளை கொட்டும் இடங்களை கண்காணித்து, நீர்நிலைகளில் கொட்டுவதை தடுக்கவும் 3 கண்காணிப்பு குழுக்களை மாநகராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது. அக்குழுக்கள் விரைந்து சென்று நடவடிக்கை எடுக்க பிரத்தியேக ரோந்து வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in