Published : 15 Sep 2024 06:34 PM
Last Updated : 15 Sep 2024 06:34 PM
உதகை; உதகை, குன்னூர் ரயில் நிலையங்களில், தற்போதுள்ள கட்டமைப்புகளை சீர்குலைக்காமல் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில், நீலகிரி மாவட்டத்தின் மலை தொடரின் அடிவாரத்தில், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை ரயில் பாதை அமைத்து, 1899ல் முதல் போக்குவரத்து தொடங்கியது. தொடர்ந்து, ரயில் பாதை ஃபர்ன்ஹில் மற்றும் உதகை வரை நீட்டிக்கப்பட்டது. தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலத்தில் மிகவும் செங்குத்தான சாய்வுகளில், 45.88 கி.மீ., நீளமுள்ள நீலகிரி மலை ரயில், 250 பாலங்கள் மற்றும் 16 சுரங்கங்களுடன் அமைக்கப்பட்டது பொறியியல் அதிசயமாக கருதப்பட்டது.
நீலகிரி மலை ரயில் பாதையின் சாய்வு அமைப்பு, ஆசியாவிலேயே மிகவும் செங்குத்தான சாய்வு பாதை ஆகும். அதில், கல்லாறு - குன்னூர் இடையே உள்ள பாதையில் ரயிலை உறுதியாக பிடிக்கும், தனித்துவமான பல்கரம் அமைப்பை கொண்டுள்ளது. இந்த பொறியியல் அதிசயத்தை அங்கீகரித்து, ‘யுனெஸ்கோ’ அமைப்பு, நீலகிரி மலை ரயில் பாதையை, 2005ல் உலக பாரம்பரிய தளமாக அறிவித்தது. இத்தகைய சிறப்பு பெற்ற, உதகை, குன்னூர் ரயில் நிலையங்கள், பாரம்பரிய அம்சங்களுக்கு இடையூறு இல்லாமல், அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில், உதகை ரயில் நிலையத்தில், சதுப்பு நிலம் அழித்து கட்டுமான பணிகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பியது.
இதேபோல, குன்னூரில் பழமையான தேக்கு மர சாரங்கள் அகற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இங்குள்ள பழமை வாய்ந்த மரத்தை வெட்டி அகற்ற முயற்சி செய்தது தன்னார்வலர்களால் தடுக்கப்பட்டு, மரத்தை பாதுகாக்கும் பணிகள் நடந்து வருகிறது.
‘யுனெஸ்கோ’ அங்கீகாரம் பெற்ற ரயில் நிலையங்களின் பாரம்பரியத்தை சிதைக்கக் கூடாது என மலை ரயில் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில், உதகை, குன்னூர் ரயில் நிலையங்களில், தற்போதுள்ள கட்டமைப்புகளை சீர்குலைக்காமல் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன என தெற்கு ரயில்வே சேலம் கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் மரிய மைக்கேல் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வரும் நிலையில், சிறந்த உலகளாவிய மதிப்பை முறையாக பராமரிக்க, நீலகிரி மலை ரயிலின் சுற்றுவட்டார பகுதியில் மேம்பாடு பணிகள் நடந்து வருகின்றன.
அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ், நீண்ட கால தொலைநோக்கு பார்வையுடன் மேம்படுத்தப்படும் உதகை மற்றும் குன்னூர் ரயில் நிலையங்களில், பாரம்பரிய மதிப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், தற்போதுள்ள கட்டமைப்புகள் சீர்குலைக்காமல் புதுப்பிக்கப்படுகிறது. வாகன நெரிசலை குறைக்க, தனி அகலமான பாதை அமைக்கப்படுகிறது.
இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதிகளை ஏற்படுத்துதல், இயற்கையை ரசிக்க சுற்றுப்புற அழகுபடுத்துதல்; முகப்பு வளைவு, மேம்பாலம் புதுப்பித்து பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. வடிகால் வசதி, சுகாதாரம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மறுசீரமைப்பு பணிகளுக்கு பிறகு ரயில் நிலையம் பயணிகளுக்கு நவீன வசதிகளுடன், இனிமையான சூழலைக் கொண்டிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT