வக்பு வாரிய சட்டமசோதா: நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் திருமாவளவன் ஆட்சேபனை

திருமாவளவன் | கோப்புப்படம்
திருமாவளவன் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: மத்திய அரசின் வக்பு வாரிய சட்டமசோதா சிறுபான்மை மக்களுக்கான உரிமைகளை பறிப்பதாக நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் விசிக தலைவர் திருமாவளவன் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

பாஜக அரசு அறிமுகப்படுத்தியுள்ள வக்பு வாரிய சட்ட மசோதா இப்போது நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வில் உள்ளது. அந்த மசோதாவை நிறைவேற்றக்கூடாது என டெல்லியில் நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் விசிக சார்பிலான ஆட்சேபனைகளை நேற்று வழங்கினார்.

அந்த ஆட்சேபனை மனுவில் அவர் கூறியிருப்பதாவது: வக்பு நிறுவனங்கள் குறித்த விளக்கத்தில் சர்ச்சைக்குரிய மாற்றங்களை இந்த மசோதா செய்திருக்கிறது. வக்பு வாரியத்தின் அமைப்பு முத்தவல்லியின் கடமைகள் ஆகியவற்றிலும் மாற்றங்களைச் செய்திருக்கிறது. இது அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 26-ல் சிறுபான்மை சமூகத்தினருக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகளைப் பறிப்பதாக இருக்கிறது.

வக்பு வாரியங்களை நிர்வகிப்பதில் முஸ்லிம் அல்லாதவர்களை அதிகம் நியமிக்க வழி வகுக்கிறது. வக்பு வாரிய நிர்வாகத்தில் அரசின் தலையீட்டை அதிகரிக்கிறது. வக்பு வாரிய அதிகாரங்களைக் குறைக்கிறது. வக்பு வாரிய கவுன்சிலில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களை நியமித்து அதன் பண்பை மாற்றுகிறது.

வக்பு வாரிய சொத்துக்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. முஸ்லிம்களில் உள்ள போரா, ஆகாகனி என வெவ்வேறு பிரிவினருக்கு தனித்தனி வக்பு வாரியங்களை உருவாக்க அனுமதிப்பதன் மூலம் முஸ்லிம்களைக் கூறுபடுத்துகிறது ஆகிய காரணங்களால் வக்பு திருத்த கூறுபடுவை விசிக எதிர்க்கிறது. இவ்வாறு திருமாவளவன் அதில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in