Last Updated : 11 Jun, 2018 08:37 AM

 

Published : 11 Jun 2018 08:37 AM
Last Updated : 11 Jun 2018 08:37 AM

பார்வையற்ற மாணவர்களுக்கான அரசுப் பள்ளிகளில் பிரெய்லி புத்தகங்கள் எப்போது வழங்கப்படும்?- அச்சடிக்கும் பணி தொடங்கப்படவில்லை என பெற்றோர், ஆசிரியர் வேதனை

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் பார்வையற்றோர் பள்ளி மாணவர்களுக்கான பிரெய்லி புத்தகங்கள் அச்சடிக்கும் பணியே தொடங்கப்படவில்லை என பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் வேதனையுடன் தெரிவித்து உள்ளனர்.

தமிழகத்தில் தஞ்சாவூரில் பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியும், சென்னையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும், திருச்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் உள்ளன. மேலும் சேலம், புதுக்கோட்டை, மதுரையில் அரசு நடுநிலைப் பள்ளியும், சிவகங்கை, கடலூர், தருமபுரி, கோவை ஆகிய இடங்களில் தொடக்கப் பள்ளிகளும் உள்ளன.

இதுதவிர, தமிழகமெங்கும் 19 அரசு உதவி பெறும் பள்ளிகள் பார்வையற்றோருக்காக உள்ளன. உண்டு உறைவிட பள்ளிகளாகச் செயல்படும் இப்பள்ளிகளில் நூற்றுக்கணக்கானோர் பயில்கின்றனர்.

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட ஜூன் 1-ம் தேதியே பார்வையற்றோர் பள்ளிகள் தவிர அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஆனால், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பார்வையற்றோர் பள்ளிகளுக்கான பிரெய்லி பாடப் புத்தகங்கள் இதுவரை வழங்கப்படவில்லை.

இதுகுறித்து ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் சரவண மணிகண்டன் கூறியது: அனைத்து பொதுப் பள்ளி மாணவர்களுக்கும் பள்ளி திறந்த நாளன்றே புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிலும், பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்ட 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், தமிழகத்தில் பார்வையற்றோர் பள்ளி மாணவர்களுக்கு பிரெய்லி புத்தகங்கள் வழங்கப்படவில்லை. அதிலும், பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்ட வகுப்புகளுக்கான பிரெய்லி வடிவிலான பாடப் புத்தகங்களை அச்சடிக்கும் பணியே இன்னும் தொடங்கப்படவில்லை.

இதனால், பாடப் புத்தகங்கள் முதல் பருவம் முடியும் தருவாயில்தான் கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. புத்தகம் இல்லாமலேயே படிக்க வேண்டிய நிலைக்கு பார்வையற்ற மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். பாடத் திட்டம் தயாரிப்புக் குழுவில் பார்வையற்ற கல்வியாளர் ஒருவர்கூட இடம்பெறாததே இத்தகைய பின்னடைவுக்குக் காரணம். எனவே, பிரெய்லி புத்தகங்களை அச்சடித்து விரைவில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பணி தொடங்கியதாக விளக்கம்

இதுகுறித்து சென்னையில் உள்ள தேசிய பார்வையற்றோருக்கான நிறுவனத்தின் மண்டல இயக்குநரக அலுவலர்கள் கூறியது: பிரெய்லி புத்தகங்களை அச்சடிக்கும் பணி தொடங்கி உள்ளது. பார்வையற்றோர் பள்ளிகளில் எந்தெந்த வகுப்புகளுக்கு எத்தனை புத்தகங்கள் தேவை என்ற விவரம் இன்னும் சம்பந்தப்பட்ட துறையிடம் இருந்து வந்து சேரவில்லை. அந்த விவரம் கிடைத்ததும் புத்தகங்கள் அச்சடிக்கும் பணி இறுதி செய்யப்பட்டு வழங்கப்படும்.

அதேபோன்று, புதிய பாடத் திட்டம் கல்வித் துறையின் இணையதளத்தில் சில தினங்களுக்கு முன்புதான் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதை பிரெய்லி வடிவில் மாற்றும் பணி தற்போது நடந்து வருகிறது. இப்பாடங்களுக்கான பிரெய்லி புத்தகங்களும் தேவைக்கு ஏற்ப அச்சடித்து வழங்கப்படும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x