Published : 06 Jun 2018 05:02 PM
Last Updated : 06 Jun 2018 05:02 PM

எஸ்.வி.சேகர் விவகாரம்; தமிழக அரசு யாருக்கும் அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்

எஸ்.வி.சேகர் விவகாரத்தில் தமிழக அரசு யாருக்கும் அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், “போராட்டங்களை ஒடுக்குவதற்காக சில அமைப்புகளை தடை செய்ய உள்ளதாக அனுமானத்தின் அடிப்படையில் கூறப்படுவதற்குப் பதில் சொல்ல முடியாது. தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பேச்சுகள் இறையாண்மைக்கு எதிரானதாக இருந்ததால் சட்டத்திற்குட்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எஸ்.வி.சேகர் கைது விவகாரத்தில் யாருக்கும் அடிபணிய வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை. உச்ச நீதிமன்றம் அவரது முன் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி அவர் ஜாமீன் பெறலாம் என உத்தரவிட்டுள்ளது. அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதே, விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான்.

இந்த ஆட்சியை கவிழ்ப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன் கூறியிருக்கிறார். இந்த ஆட்சி பானையோ, சட்டியோ இல்லை. அதனை எளிதில் கவிழ்க்க முடியது. டிடிவி தினகரனைப் பொறுத்தவரையில் அவர் திமுகவுடன் ஒத்துப்போய் விட்டார். அரசை எதிர்த்து நீதிமன்றம் செல்வதாக இருக்கட்டும், ஆளுநரை நேரில் சந்திப்பதாக இருக்கட்டும் இரு கட்சிகளும் பேசிக்கொண்டு செய்கின்றன.

திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் அன்று டிடிவி தினகரன் கட்சி அலுவலகத்தை திறந்திருக்கிறார். இதிலிருந்தே டிடிவி தினகரனின் திமுக மீதான நேசம், பாசம் கண்கூடாகத் தெரிகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திமுகவை எதிரிக்கட்சியாக நினைத்தார். அதனையறிந்து டிடிவி தினகரனிடம் இருப்பவர்கள் எங்களிடம் திரும்பி வர வேண்டும். சந்தர்ப்பவாத அரசியல் எடுபடாது.

தமிழ்நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் திமுகதான் காரனம்” என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x