Published : 28 Jun 2018 01:19 PM
Last Updated : 28 Jun 2018 01:19 PM

தமிழகத்தில் குடியேறும் வட இந்தியர்கள் எண்ணிக்கை கடும் உயர்வு: 10 ஆண்டுகளில் தலைகீழ் மாற்றம்

 தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஹிந்தி, வங்காளம், ஓரியா மொழி பேசுவோர்  கடந்த 10 ஆண்டுகளில் அதிகஅளவில் குடியேறியுள்ளனர். அதேசமயம் தமிழகம், கேரளாவைச் சேர்ந்தவர்கள் வட இந்தியாவிற்கு சென்று குடியேறுவது கணிசமாக குறைந்துள்ளது.

அரசு வேலை, தொழில், வர்த்தகம் போன்ற காரணங்களுக்காக தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் அதிகஅளவில் வட இந்தியாவில் குடியேறுவது வழக்கம். குறிப்பாக பெருநகரங்களான டெல்லி, மும்பை, அகமதாபாத்தில் தமிழர்களும், கேரள மக்களும் அதிகமாக குடியேறி வந்தனர். இதுமட்டுமின்றி டெல்லியைச் சுற்றியுள்ள நொய்டா, குர்கான் போன்ற நகரங்களிலும் அதிகமானோர் குடியேறி வந்தனர்.

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் இது உறுதிப்படுகிறது. ஒவ்வாரு பத்தாண்டில் கணிசமானோர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக வட இந்திய மாநிலங்களில் குடியேறியுள்ளனர். தமிழர்கள், கேரள மக்களை தொடர்ந்து கர்நாடகா, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் குறிப்பிடத்தக்க அளவில் வட மாநிலங்களில் குடியேறி வந்தனர்.

ஆனால் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் தலைகீழான நிலை ஏற்பட்டுள்ளது. வட இந்திய நகரங்களில் குடியேறும் தமிழர்கள், கேரள மக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

தமிழர்கள் வட மாநிலங்களில் குடியேறுவது 2001-ம் ஆண்டில் 8.2 லட்சமாக இருந்த நிலையில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் இது 7.8 லட்சமாக ஆக குறைந்துள்ளது. இதுபோலவே கேரள மக்கள் 2001-ம் ஆண்டில் 8 லட்சம் பேர் வட இந்திய மாநிலங்களில் சென்று குடியேறிய நிலையில் 2010-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 7.2 லட்சம் என்ற அளவில் சரிவடைந்துள்ளது.

ஆனால் அதற்கு நேர் மாறாக உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களில் இருந்தும், அசாம் போன்ற வட கிழக்கு மாநிலங்களிலும் இருந்து ஏராளமானோர் தமிழகம், கேரளாவில் குடியேறியுள்ளனர். நேபாளிகளும் கணிசமான அளவில் தென் மாநிலங்களில் குடியேறியுள்ளனர்.

தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களில் குடியேறும் வட இந்தியர்களின் எண்ணிக்கை 2001-ம் ஆண்டு 58.2 லட்சம் என்ற எண்ணிக்கையில் இருந்த நிலையில் 2011-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 77.5 லட்சமாக உயர்ந்துள்ளது. 33.2 சதவீத அளவிற்கு வட இந்தியர்கள் தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் குடியேறும் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

தென் மாநிலங்களில் நிலவும் அமைதியான சூழல், வேலைவாய்ப்பு, பொருளாதார வசதி போன்ற காரணங்களுக்காக இவர்கள் தமிழகத்தில் குடியேறியுள்ளதாக தெரிகிறது. தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ளூர் வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காத நிலையில் வர்த்தக நிறுவனங்களும் வட இந்திய தொழிலாளர்களை பெரிய அளவில் பணிக்கு அமர்த்தி வருகின்றன. இதன் காரணமாகவும், அவர்கள் தமிழகம், கேரளாவில் குடியேறுவது அதிகரித்துள்ளது. இதுமட்டுமின்றி உயர் கல்விக்காகவும், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு ஹிந்தி, வங்காளம், ஒரியா மொழி பேசுபவர்கள் கணிசமான அளவில் வருகை தருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x