Published : 14 Sep 2024 05:15 AM
Last Updated : 14 Sep 2024 05:15 AM

அரசு பொது மருத்துவமனையில் ரூ.2.76 கோடியில் புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தும் அதிநவீன கருவி

சென்னை: புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தக்கூடிய ரூ.2.76 கோடி மதிப்பிலான அதிநவீன கருவியை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சை நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரூ.2.76 கோடி மதிப்பிலான அதிநவீன கோபால்ட் புறக்கதிர்வீச்சு சிகிச்சை கருவியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

தொடர்ந்து, அரசு மருத்துவமனைகளில் முதல் முறையாக ரத்தப் பரிசோதனை முடிவுகளை இணையதளம் மற்றும் செல்போன் மூலமாக மருத்துவர்களும், நோயாளிகளின் உதவியாளர்களும் தெரிந்து கொண்டு துரிதமாக சிகிச்சை பெறுவதற்கான இணையதள சேவையை தொடங்கி வைத்தார். பின்னர், கண்காட்சியை தொடங்கி வைத்துபார்வையிட்ட அமைச்சர், நேரியல் முடுக்கி கருவியினை ஆய்வு செய்தார்.

மருத்துவமனை டீன் தேரணிராஜன், புற்றுநோய் கதிர்வீச்சு துறைத் தலைவர் விஜயஸ்ரீ உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை என்பது ஒரு நூற்றாண்டை கடந்து இருக்கிறது.

பயனடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் அதிகமாகும்.இதை மேலும் வலுப்படுத்தும் வகையில், ரூ.2.76 கோடியில் புற்றுநோய் புறகதிர்வீச்சு சிகிச்சைக்காக அதிநவீன கோபால்ட் கருவி நிறுவப்பட்டு இன்றுஅதன் பயன்பாடு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இது புற்றுநோய் தாக்கப்பட்ட உடல் திசுக்களின் மீது மட்டும் பாய்ந்து துல்லியமாக புற்றுநோய் செல்களை முழுமையாக அகற்றும் அற்புதமான கருவி ஆகும். இதன்மூலம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய், தலை மற்றும் கழுத்து புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய் போன்ற பாதிப்பை முழுமையாக குணப்படுத்த முடியும்.

புறநோயாளிகளுக்கு சில மணித்துளிகளிலேயே சிகிச்சை அளிக்க முடியும். முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுதிட்டத்தின் மூலம் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்பட தொடங்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் ரூ.27 கோடியில் புற்றுநோய்களை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த அரசு பொறுப்பேற்றபிறகு தஞ்சாவூர், நெல்லை, சேலம்,கோவை, காஞ்சிபுரம் ஆகிய 5 மருத்துவமனைகளில் புற்றுநோய் கண்டறியும் அதிநவீன கருவிகள் நிறுவப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x