Published : 08 Aug 2014 10:00 AM
Last Updated : 08 Aug 2014 10:00 AM

மன்னார்குடி கல்லூரியில் ராகிங்: 4 மாணவர்கள் கைது

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ராகிங் செய்து, காலில் விழக் கூறி முதலாண்டு மாணவரைத் தாக்கிய வழக்கில் அதே கல்லூரியைச் சேர்ந்த 4 மாணவர்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர் விளார் சாலை அண்ணா நகரைச் ரவிச்சந்திரன் மகன் ஜெகன் (23). முதலாண்டு டிஇஇஇ டிப்ளமா படிப்பில் சேர்ந்த இவர் செவ்வாய்க்கிழமை கல்லூரிக்கு சென்றபோது, அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் தங்களை அண்ணன் என்று கூறுமாறும், காலில் விழுந்து வணக்கம் தெரிவிக்குமாறும் கூறி ராகிங்கில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த ஜெகனை கல்லூரி முடிந்து வெளியே வந்தபோது அந்த மாணவர்கள் உருட்டுக்கட்டையால் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். உடல் முழுக்க காயமடைந்து, கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் ஜெகன், தஞ்சை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து மன்னார்குடி திருமக்கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து, அரவத்தூர் வெங்கடாசலம் மகன் ராஜமணிகண்டன்(18), மன்னார்குடி உப்புக்காரத்தெரு பெரமையன் மகன் வெங்கடேசன்(18), ஆலங்கோட்டை ரமேஷ் மகன் ராம்குமார்(18) மற்றும் 17 வயதான மாணவர் ஒருவர் என 4 பேரை வியாழக்கிழமை கைது செய்து மன்னார்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

நீதிபதி சுந்தரராஜன் உத்தரவின்பேரில், 17 வயதேயான மாணவர் திருவாரூர் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். மற்ற 3 பேர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x