Published : 13 Sep 2024 06:56 AM
Last Updated : 13 Sep 2024 06:56 AM

முற்போக்கு அரசியலுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு: சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

சென்னை: உடல்நலக்குறைவால் காலமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு இரங்கல் தெரிவித்த தலைவர்கள், அவரது மறைவு முற்போக்கு அரசியலுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று தெரிவித்துள்ளனர்.

உடல்நலக்குறைவு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) நேற்று காலமானார். அவரது மறைவுக்கு ஆளுநர், முதல்வர், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

ஆளுநர் ஆர்.என்.ரவி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவர் சீதாராம் யெச்சூரியின் மறைவால் ஆழ்ந்த வருத்தமடைந்தேன். இந்திய அரசியலில் அவர்வழங்கிய தாக்கம் நிறைந்த பங்களிப்புகள் என்றும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கல்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: இடதுசாரி இயக்கத்தின் மூத்த தலைவரும், இந்திய அரசியலில் உயர்ந்தஆளுமையுமான சீதாராம் யெச்சூரியின் மறைவால் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். மாணவர் தலைவர் என்ற முறையில் நெருக்கடி நிலை பிரகடனத்துக்கு எதிராகதுணிச்சலுடன் நின்ற அச்சமற்ற தலைவர். தொழிலாளி வர்க்கம்,மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம் மற்றும் முற்போக்கான சிந்தனைகளில் அவரது அர்ப்பணிப்பு எதிர்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: சீதாராம் யெச்சூரி காலமான செய்தியறிந்து துயருற்றேன். மாணவர் பருவம் முதலே முதலாளித்துவ கொடுமைகளை எதிர்த்து தொழிலாளர் நலனுக்காக பாடுபட்டவர். இந்திய அரசியல் தலைவர்களின் நன்மதிப்பை பெற்ற அவரது மறைவு நாட்டுக்கும், தொழிலாளர் வர்க்கத்துக்கும் பேரிழப்பாகும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று மிகச் சிறப்பாக செயல்பட்டவர் சீதாராம் யெச்சூரி. தேசிய அளவில் மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்க பெரும் துணையாக இருந்தவர். அவரது மறைவு மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கு பேரிழப்பு.

பாமக நிறுவனர் ராமதாஸ்: சீதாராம் யெச்சூரி காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். சமூகநீதிக்காக என்னுடன் தோள்நின்ற அவரது மறைவு எனக்குதனிப்பட்ட முறையில் இழப்பாகும்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: மாணவ பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து அதன் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர் சீதாராம் யெச்சூரி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் போராளியாக பணியாற்றிய இவரின் மறைவு இடதுசாரிகளுக்கும், முற்போக்கு சிந்தனையாளர்களுக்கும் பேரிழப்பு.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: சமூக,பொருளாதார, அரசியல் தளங்களில் இடதுசாரி சக்திகளும், கம்யூனிஸ்டுகளும் கடும் சவால்களை எதிர் கொண்டிருக்கும் இக்காலத்தில், ஆழ்ந்த மார்க்சிய அறிவும், தத்துவத் தெளிவும் கொண்ட சீதாராம் யெச்சூரியின் இழப்பு, ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளுக்கு ஏற்பட்ட பேரிழப்பு.

விசிக தலைவர் திருமாவளவன்: இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் சீதாராம் யெச்சூரியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அவரது மறைவு இடதுசாரிகளுக்கு மட்டுமல்ல. உழைக்கும் மக்கள் அனைவருக்கும் நேர்ந்த பேரிழப்பு.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: சீதாராம் யெச்சூரி காலமான செய்திகேட்டு வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: சீதாராம் யெச்சூரியின் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமல்ல இந்திய அரசியலுக்கே மிகப்பெரிய இழப்பாகும்.

மநீம தலைவர் கமல்ஹாசன்: இந்திய அரசியலின் ஜாம்பவான் சீதாராம் யெச்சூரியின் மறைவு செய்தியறிந்து வருத்தமுற்றேன். மாணவர் சங்க பிரதிநிதி முதல் கட்சி தலைவர் வரையிலான அவரது அரசியல் பயணத்தில் தனது அழியாத முத்திரையை பதித்தவர். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

தவெக தலைவர் விஜய்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவு செய்தி கேட்டு மிகவும்வருத்தமடைந்தேன். முற்போக்கு அரசியலில் அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: அரசியல்வாதியாக, பொருளாதார நிபுணராக, எழுத்தாளராக பன்முகத்தன்மை கொண்டவராக திகழ்ந்த சீதாராம் யெச்சூரியின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.

இதேபோன்று, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக தலைவர் அன்புமணி, திக தலைவர் கி.வீரமணி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், வி.கே.சசிகலா,தமிழ்நாடு தலைமைச் செயலகசங்கத்தின் தலைவர் கு.வெங்கடேசன் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள், தொழிற்சங்க தலைவர்கள் பல்வேறு அமைப்புகள் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x