Last Updated : 10 Aug, 2014 05:51 PM

 

Published : 10 Aug 2014 05:51 PM
Last Updated : 10 Aug 2014 05:51 PM

ஜேம்ஸ் ஆண்டர்சனின் செல்லமான விராட் கோலி

ஒரே பந்து வீச்சாளரிடம் தொடர்ந்து ஆட்டமிழந்து கொண்டிருந்தால் சர்வதேச கிரிக்கெட் வழக்கில் அதற்கு ஒரு பெயர் உண்டு. அதாவது அவுட் ஆகும் வீரர் அந்த பவுலரின் செல்லப் பிள்ளை என்று கூறப்படுவதுண்டு.

ஆங்கிலத்தில் ஒரு குறிப்பிட்ட வழக்கில் இதனை bunny என்று அழைப்பார்கள். bunny என்றால் சிறு அல்லது இளம் முயல் என்ற ஒரு அர்த்தமும் உண்டு. victim என்ற அர்த்தமும் உண்டு. இன்னும் நிறைய சூழல்களில் இந்த வார்த்தையின் பொருள் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆங்கில வழக்கில் ஒருவரை முட்டாளாக்குவது என்ற பொருள் உள்ளது.

உண்மையில் தொடர்ந்து ஒரு பேட்ஸ்மெனின் விக்கெட்டை குறிப்பிட்ட பவுலர் வீழ்த்துகிறார் என்றால் அந்த பேட்ஸ்மெனை அந்த குறிப்பிட்ட பவுலர் முட்டாளாக்குகிறார் என்றே பொருள். ஆனால் அது மிகவும் எதிர்மறைப் பொருளில் அமைந்து விடும் என்பதால் செல்லப்பிள்ளை அல்லது செல்லம் என்று கொஞ்சு மொழியில் குறிப்பிடுவது நலம்.

இதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு. பிரபல உதாரணம் தென் ஆப்பிரிக்க வீரர் டேரில் கலினன், இவர் ஷேன் வார்ன் பந்துவீச வந்தால் நடுநடுங்கி விக்கெட்டைப் பறிகொடுப்பார். மேலும் ஷேன் வார்னால் இவரது கிரிக்கெட் வாழ்வே அரைகுறையாக முடிவுக்கு வந்தது.

இன்னொரு உதாரணம் ரிக்கி பாண்டிங், இவர் நம் ஹர்பஜன் சிங் பந்து வீச்சில் குறைந்தது 10 முறையாவது அவுட் ஆகியிருப்பார். எனவே ஹர்பஜன் சிங்கின் செல்லம் பாண்டிங் என்று கூறப்படுவதுண்டு.

ஜாகீர் கான் பந்தில் 8, 9 முறையாவது அவுட் ஆகியிருக்கும் தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித்தையும் ஜாகீர் கானின் bunny என்று அழைப்பார்கள்.

அந்த வகையில் இப்போது ஜேம்ஸ் ஆண்டர்சனின் செல்லமாகியுள்ளார் நம் விராட் கோலி, நடப்பு டெஸ்ட் தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 30 பந்துகளை கோலிக்கு வீசியுள்ளார். அதில் 7 ரன்களையே விராட் கோலி எடுக்க முடிந்தது. ஆனால் 4 முறை அவரிடமே அதுவும் ஒரே விதத்தில் ஆக்‌ஷன் ரிப்ளே பார்ப்பது போல் அவுட் ஆகியிருக்கிறார்.

ஆண்டர்சனை இவர் எதிர்கொண்ட 6 இன்னிங்ஸ்களில் 3 இன்னிங்ஸ்களில் கோலி அவரது பந்தில் 1 ரன் கூட எடுக்கவில்லை. மொத்தமாக 5 முறை கோலி, ஆண்டர்சனிடம் ஆட்டமிழந்துள்ளார். 10 இன்னிங்ஸ்களில் 30 ரன்களையே அவருக்கு விட்டுக் கொடுத்துள்ளார் ஆண்டர்சன் என்கிறது கிரிக் இன்ஃபோ புள்ளி விவரங்கள்.

இந்த நிலையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், ”அடுத்த சச்சின் டெண்டுல்கர் என்று கூறப்படுவது பொருந்தாது. அவரைப்போல் ஆகவேண்டுமென்றால், அயல்நாட்டு மண்ணில் சாதிக்க வேண்டும், ஆனால் இவரோ கிரீசில் எவ்வளவு பலவீனமாக இருக்கிறார் என்று பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

அதாவது இவரை எப்படி அடுத்த சச்சின் என்கின்றனர் என்று ஆச்சரியமளிக்கிறது என்கிறார் மைக்கேல் வான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x