Published : 18 Jun 2018 09:04 AM
Last Updated : 18 Jun 2018 09:04 AM

10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்தி மொழி பயிற்றுவித்த தென்னிந்திய இந்தி பிரச்சார சபா 100-வது நிறுவன நாள்: சென்னையில் சிறப்பு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது

சென்னையில் உள்ள தென்னிந்திய இந்தி பிரச்சார சபாவின் 100-வது நிறுவன நாள் விழா நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு சிறப்பு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.

நாட்டில் உள்ள அனைவரை யும் ஒரே பொதுமொழியின்கீழ் இணைக்க வேண்டும் என 1918-ம் ஆண்டு இந்தூரில் நடைபெற்ற மாநாட்டில் காந்தியடிகள் கூறினார். அவரது கருத்தை நனவாக் கும் வகையில், அதே ஆண்டு சென்னையில் தென்னிந்திய இந்தி பிரச்சார சபா ஏற்படுத்தப்பட்டது. இச்சபாவை 1918-ம் ஆண்டு ஜூன் 17-ம் தேதி அன்னி பெசன்ட் அம்மையார் தொடங்கி வைத்தார்.

இந்தி மொழியை பிரச்சாரம் செய்வதற்காக காந்தியடிகள் தனது இளைய மகன் தேவதாஸ் காந்தியை இந்தச் சபாவுக்கு அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்த சபா மூலம் இந்தி மொழியைப் பயின்றுள்ளனர். இந்தச் சபா தொடங்கி நூறு ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு, 100-வது நிறுவன நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சிறப்பு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.

சென்னை நகர அஞ்சல்துறை தலைவர் ஆர். ஆனந்த், அஞ்சல்தலையை வெளியிட்டு பேசிய தாவது:

இந்தி மொழியில் சிறந்து விளங்கும் அறிஞர்கள், பிரபலங்களை கவுரப்படுத்தும் விதமாக அஞ்சல்துறை, அஞ்சல்தலைகளை வெளியிட்டு வருகிறது. 20-ம் நூற்றாண்டில் இந்தி மொழி யில் அறிஞராகத் திகழ்ந்த முன்ஷி பிரேம்சந்த் என்பவரது நினைவாக அவரது அஞ்சல்தலை 1960-ம் ஆண்டு வெளி யிடப்பட்டது.

அதேபோல், இந்தி மொழியை அலுவல் மொழியாக்க பாடுபட்ட பாபு புருஷோத்தம் தாஸ் டான்டன் என்பவருக்கு 1962-ம் ஆண்டு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.

உத்தரபிரதேசத்தில் பெண் கல்விக்கான அமைப்பை ஏற்படுத்தியவர்களில் ஒருவரும், இந்தி மொழி இலக்கியத்துக்கு சிறப் பான பங்களிப்பு வழங்கியதற்காக மகாதேவி வர்மா என்ற பெண்மணியை கவுரப்படுத்தும் விதமாக 1991-ம் ஆண்டு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.

மேலும், 1975-ம் ஆண்டு நாக்பூரில் நடந்த முதலாவது இந்தி மொழி மாநாடு மற்றும் போபாலில் 2015-ம் ஆண்டு நடைபெற்ற 10-வது இந்தி மொழி மாநாட்டின் நினைவாகவும் அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.

இந்நிலையில், 100-வது நிறு வன நாளைக் கொண்டாடும் இச்சபாவின் நினைவாக தற்போது அஞ்சல்தலை வெளியிடப்பட்டுள்ளது. இதில் காந்தியடிகளின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளதோடு, அவர் எழுதிய கடிதமும் இடம் பெற்றுள்ளது. மேலும், இந்தச் சபாவில்தான் நான் பிராத்மிக் முதல் பிரவீன் வரை இந்தி மொழி பாடத்தை பயின்றேன். இந்நிலையில், இந்த சபாவின் 100-வது நிறுவன நாள் நிகழ்ச்சியில் பங்கேற்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவுக்கு தலைமை வகித்த தென்னிந்திய இந்தி பிரச்சார சபாவின் தலைவரும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான சிவராஜ் வி.பாட்டில் பேசும்போது, “நூறு ஆண்டுகளாக இந்தச் சபா இந்தி மொழியை கற்றுத் தருவதில் மிகப் சிறப்பான பங்காற்றி வருகிறது. 100 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு அதன் நினைவாக அஞ்சல்தலை வெளியிடப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த 100 ஆண்டுகளுக்கு இந்த சபாவை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களில் பங்கேற்க பிரதமர் உள்ளிட்டவர்களை அழைக்க வேண்டும்” என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.விஜயகுமார், சபாவின் பொதுச் செயலாளர் எஸ்.ஜெயராஜ், செயலாளர் டி.எஸ்.வி. பாண்டுரங்க ராவ் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x