Published : 13 Sep 2024 05:30 AM
Last Updated : 13 Sep 2024 05:30 AM

திடீர் மாரடைப்பு ஏற்படும் பயணிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் நவீன கருவி

ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு மாரடைப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு உடனே முதலுதவி செய்வதற்கான நவீன கருவி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளது. | படம் : எஸ்.சத்தியசீலன் |

சென்னை: மாரடைப்பு ஏற்படும் பயணிகளுக்குமுதலுதவி சிகிச்சை அளிக்க வசதியாக, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் தானியங்கி வெளிப்புற டிஃபிபிரிலேட்டர்கள் என்ற நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவிவிரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களாக சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் உள்ளன. வட மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்தும், தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் எழும்பூரில் இருந்தும் புறப்படுகின்றன.

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு தினசரி 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர், எழும்பூர் ரயில் நிலையத்துக்கு 75,000-க்கு மேற்பட்டோர் வந்துசெல்கின்றனர். இந்த 2 ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் தரப்பில் எடுக்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் ரயில்வே நிர்வாகம் ஆகியன சார்பில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில், திடீர் மாரடைப்பு ஏற்படும்போது, பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கான நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது.

எழும்பூர் ரயில் நிலையத்தில் 4-வது நடைமேடையில் உள்ள நிலைய கண்காணிப்பு அதிகாரி அலுவலகம் உள்ளிட்ட 6 இடங்களிலும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 7 இடங்களிலும் இந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

தானியங்கி வெளிப்புற டிஃபிபிரிலேட்டர்கள் (ஏ.இ.டி) என்று அழைக்கப்படும் இந்த கருவி, ரயில் நிலையத்துக்கு வரும் பயணிக்குதிடீரென மாரடைப்பு ஏற்படும்போது அல்லது இதய செயலிழப்புஏற்பட்டு சுயநினைவை இழக்கும்போது முதலுதவி சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: ஒருவருக்கு இதயம் செயல்படாமல் திடீரென நின்று, சுய நினைவை இழக்கும்போது, முதலுதவி சிகிச்சை அளிக்க இந்த கருவி பயன்படும். முதல்கட்டமாக சென்ட்ரல், எழும்பூர் நிலையங்களில் இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இதை எவ்வாறு உபயோகப்படுத்த வேண்டும் என்பதுதொடர்பாக ரயில்வே ஊழியர்களுக்கு முறையான பயிற்சி அளித்து,அதன்பிறகு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x