அதிமுகவில் மீண்டும் இணைந்தார் மைத்ரேயன்

அதிமுகவில் மீண்டும் இணைந்தார் மைத்ரேயன்
Updated on
1 min read

சென்னை: முன்னாள் எம்.பி வா.மைத்ரேயன் அதிமுகவில் மீண்டும் இணைந்துள்ளார். புற்றுநோய் மருத்துவரான மைத்ரேயன், ஆர்எஸ்எஸ் உறுப்பினராக பொதுவாழ்வைத் தொடங்கினார். 1991-ம்ஆண்டு பாஜக தமிழ்நாடு பிரிவின் செயற்குழு உறுப்பினரானார். 1995 முதல்1997 வரை பாஜக தமிழ்நாடு பொதுச் செயலாளராகவும், 1997 முதல் 1999 வரைதுணைத் தலைவராகவும், 1999 முதல் 2000 வரை மாநில தலைவராகவும் பதவி வகித்தார்.

பின்னர் 2000-ம் ஆண்டில் இவர் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். 2001 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினாலும், 2002-ம் ஆண்டு முதல் 3 முறைமாநிலங்களவை எம்பி.யாக நியமிக்கப் பட்டார்.

ஜெயலலிதா இருந்தவரை, அவரதுஆசியுடன் கட்சியில் பெரும் செல்வாக்குடன் பயணித்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் 2017-ம் ஆண்டு ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கியபோது, ஓபிஎஸ் அணியில் இருந்தார். கட்சியில் ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்தபோது, பழனிசாமி அணிக்கு சென்றார். பின்னர் ஓபிஎஸ் அணிக்கு திரும்பினார்.

அதிமுகவில் 23 ஆண்டு பயணத்துக்கு பின் கடந்த ஆண்டு செப்டம்பரில் பாஜகவில் இணைந்தார். அதில் ஓராண்டு பயணித்த அவர், நேற்று சென்னையில் பழனிசாமியை திடீரென சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் அதிமுக தலைமையகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘அதிமுகவில் தன்னை சேர்த்துக் கொள்ளும்படி பொதுச்செயலாளர் பழனிசாமியிடம், முன்னாள் எம்.பி. மைத்ரேயன் கடிதம் வழங்கினார். அதை பரிசீலனை செய்தபின், மைத்ரேயனை கட்சியில் இணைத்துக் கொண்டார்’’ என்று கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in