Published : 24 Jun 2018 11:23 am

Updated : 24 Jun 2018 11:23 am

 

Published : 24 Jun 2018 11:23 AM
Last Updated : 24 Jun 2018 11:23 AM

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம்: காங்கிரஸ் தலைவர்களுக்குள் கருத்து மோதல்

8

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்குள் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

தமிழக மாணவர் காங்கிரஸின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், “முன்பு கருணாநிதி, ஜெயலலிதா போன்றோரின் அரசியல் பேச்சுகள் கவனிக்கப்பட்டு வந்தன. தற்போது, யார் யாரோ பேசுகின்றனர். சிலர் தங்கள் படம் வெளியாவதற்கு முன்பு பேசுகின்றனர். படம் வெளி யான பிறகு சத்தத்தை குறைத்து விடுகின்றனர். சிலர் பேசுவதே புரிவதில்லை. ஸ்டெர்லைட் போன்ற கேடு விளைவிக்கும் திட்டங்களை எதிர்ப்பதில் நியாயம் உண்டு. ஆனால், எல்லா திட்டங்களையும் எதிர்ப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. சாலைகள் போடுவது என்பது நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான ஒன்று. நாடு முன்னேற்றம் அடைய கட்டமைப்பு வசதிகள் அவசியம்” என்றார்.

ஈவிகேஎஸ் இளங்கோவனின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், “காலம் காலமாக விவசாயம் செய்து வந்த நிலங்களை இழக் கும் நிலையில் விவசாயிகள் உள்ளனர். இந்நிலையில், சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை அவசரகதியில் நிறைவேற்ற வேண்டிய அவசியம் இருப்பதன் காரணத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. அரசாங்கம் வழிப்பறி கொள்ளைக்காரர்கள் போல் நடந்துகொள்ளக்கூடாது.

திட்டத்துக்கு ஏற்ப மக்களை தயார்படுத்த வேண்டும். மாற்றுத் திட்டம் ஏதேனும் இருக்கிறதா என்பதை ஆலோசிக்க வேண்டும். காலக்கெடு நிர்ணயித்து விரைந்து முடிக்க இது புயல் நிவாரணப் பணியோ, வெள்ள நிவாரணப் பணியோ அல்ல. நீண்ட கால தொலைநோக்கு பார்வையோடு மேற்கொள்ளப்படும் திட்டம் என்று சொன்னால், மக்களுக்கு போதிய அவகாசம் அளிக்க வேண்டும். அரசின் நடவடிக்கைகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதை நான் முழுமையாக எதிர்க்கிறேன்” என்றார்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மாணிக் தாகூரிடம் இதுபற்றி கேட்டதற்கு, “ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியது பற்றி நான் எதுவும் கருத்து கூற விரும்பவில்லை. அவர் எதுவேண்டுமானாலும் பேசட்டும்” என்றார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author