மக்களவை தேர்தல் குறித்த ராகுல் காந்தியின் சர்ச்சை கருத்து: தமிழிசை கண்டனம்

மக்களவை தேர்தல் குறித்த ராகுல் காந்தியின் சர்ச்சை கருத்து: தமிழிசை கண்டனம்
Updated on
1 min read

சென்னை: மக்களவைத் தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்று அமெரிக்காவில் ராகுல் காந்தி பேசியதற்கு முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களவைத் தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் பொய் பிரச்சாரம் செய்துள்ளார். திராவிட மாடலின் 40-க்கு 40 வெற்றி ரகசியத்தை அமெரிக்காவில் வெளியிட்ட ராகுல் காந்தி, தான் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதும் இப்படி தானா?

தேர்தல் முடிவுகள் வந்த பிறகு இந்தக் கருத்தை நீங்கள் (ராகுல் காந்தி) கூறவில்லை. மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது கூட இந்த கருத்தை தெரிவிக்கவில்லை. 99 இடங்களில் வெற்றி பெற்றுவிட்டு ஏதோ மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றது போல தோல்வியைக் கூட வெற்றியைப்போல் கொண்டாடினீர்கள்.

அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்று நீங்கள் (ராகுல் காந்தி) இந்திய ஜனநாயகத்தையும், இந்திய தேர்தல் ஆணையத்தையும், ஒட்டுமொத்த இந்திய தேசத்தையும் அவமானப்படுத்துகிறீர்கள்.

தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல், தமிழக அரசு அதிகாரிகள் கண்காணிப்பிலும் கட்டுப்பாட்டிலும் தானே நடைபெற்றது. நியாயமற்ற முறையில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது என்றால், அதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தார்மீக பொறுப்பேற்க வேண்டும்.

அப்படி பார்த்தால், தமிழகத்தில் 40-க்கு 40 இடங்கள் வெற்றி பெற்றதை நியாயமற்ற முறையில் பெற்ற வெற்றி என்று திமுகவின் கூட்டணி கட்சித் தலைவரான ராகுல் காந்தி கூறுகிறாரா?

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களே, உங்கள் கூட்டணி தலைவரே குற்றம் சாட்டுவதால் பதவியை ராஜினாமா செய்ய தயாரா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in