தமிழகத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்தவில்லை: அமைச்சர் ரகுபதி

அமைச்சர் ரகுபதி | கோப்புப்படம்
அமைச்சர் ரகுபதி | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுக்கோட்டை: “தமிழகத்தில் யார் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படவில்லை.” என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் இன்று (செப்.12) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி கூறியதாவது: காவிரி, குண்டாறு இணைப்புத் திட்டத்தில் போதிய நிதி ஒதுக்கீடு, நிலம் கையகப்படுத்துதல் போன்ற பணிகளை முறையாக செய்யாமல், கல்லை நாட்டியது மட்டும் தான் அதிமுக அரசு செய்தது. அடிப்படை பணிகளை செய்யாமல் அறிவிப்பு செய்வதனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. ஆனால், திமுக அரசைப் பொறுத்தவரையில் யார் திட்டத்தைத் தொடங்கி இருந்தாலும், திட்டத்தில் விடுபட்டுள்ள பணிகளை முடிக்கும். இத்திட்டத்தில் தற்போது நிலமெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. கால்வாய் வெட்டும் பணி மேற்கொள்ளப்படும்.

திமுகவை மிரட்டுவதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மது ஒழிப்பு மாநாடு நடத்துவதாக மத்திய இணை அமைச்சர் விமர்சனம் செய்திருக்கிறார். திமுக எத்தகைய அச்சுறுத்தலுக்கும், மிரட்டலுக்கும் பயப்படுகிற கட்சி அல்ல. மிசாவையே சந்தித்த கட்சி. இந்தியாவிலேயே தோழமைக் கட்சிகளுக்கு உரிய மரியாதையைக் கொடுப்பதில் திமுகவைத் தவிர வேறு கட்சி இருக்க முடியாது.

குற்றச்சாட்டுகள் இருக்கிறது என்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களின் அறிக்கையின் அடிப்படையில்தான் சம்பந்தப்பட்டோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் மூலம் உத்தரவிடப்படுகிறது. வேண்டுமென்று யார் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவது இல்லை. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதைத் தடுக்க மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம் மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி, அழுத்தம் கொடுத்து, மீனவர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். படகுகளை விடுவிக்கவும் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். மத்திய அரசுதான் இந்த பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in