Published : 12 Sep 2024 12:51 PM
Last Updated : 12 Sep 2024 12:51 PM
சென்னை: குஜராத் உள்ளிட்ட 3 மாநிலங்களில் தடைசெய்யப்பட்ட கோனோகார்பஸ் மரங்களுக்கு தமிழகத்திலும் தடை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் பசுமை பரப்பை அதிகரிக்க, ‘பசுமை தமிழ்நாடு இயக்கம்’, ‘ஈரநில இயக்கம்’ உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களை அரசு தொடங்கியுள்ளது. அவற்றின் மூலமாக பல்வேறு மரக்கன்றுகளை நட்டு பசுமை பரப்பை அதிகரித்து வருகிறது அரசு. இந்நிலையில், 3 மாநிலங்களில் தடைவிதிக்கப்பட்ட, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கோனோகார்பஸ் தாவரங்களை வளர்க்க தமிழகத்திலும் தடை விதிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஓ.உன்னிகிருஷ்ணன், சுற்றுச்சூழல் துறை செயலர் பி.செந்தில்குமாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஊடுருவும் அன்னிய தாவர இனங்களை ஒழிப்பது தொடர்பாக தமிழக அரசு கடந்த 2021-ம் ஆண்டு கொள்கை ஒன்றை உருவாக்கியுள்ளது.
ஆப்பிரிக்காவை சேர்ந்த ஊடுருவும் அன்னிய தாவர இனமான கோனோகார்பஸ் சுற்றுச்சூழல் மற்றும் உடல்நல பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. இந்த மரத்தை வனம் மற்றும் வனத்துக்கு வெளியே வளர்க்க குஜராத், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தாவரம் பூக்கும்போது, ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. இதன் வேர்கள் 50 மீட்டர் ஆழம் வரை சென்று, நகரப்புற உட்கட்டமைப்புகளான தொலைத்தொடர்பு சேவை கேபிள்கள், கழிவுநீர் மற்றும் குடிநீர் குழாய்களை சேதப்படுத்துகின்றன. நிலத்தடி நீரை உறிஞ்சி, குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது.
இத்தகைய மரங்கள் சென்னையில் 192-வது வார்டு நீலங்கரை கடற்கரை பகுதியில் நடப்பட்டுள்ளன. தெருக்களில் வீடுகளுக்கு முன்பும் வளர்க்கப்படுகின்றன. இவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இத்தாவரங்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “இந்த தாவரங்கள் பூக்கும் காலத்தில் சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. புகார் மனு பெறப்பட்ட நிலையில், நீலங்கரை பகுதியில் நேரில் ஆய்வு செய்தோம். அங்கு 17 பெரிய கோனோகார்பஸ் மரங்கள் மற்றும் சிறிய செடிகள் இருந்தன. அவற்றை அகற்ற மாவட்ட பசுமைக் குழுவிடம் அனுமதி பெற இருக்கிறோம். அனுமதி கிடைத்த பின்னர், மாநகராட்சி மூலமாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இத்தாவரத்துக்கு தமிழகம் முழுவதும் தடை விதிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து முடிவெடுக்கும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT