Published : 12 Sep 2024 07:01 AM
Last Updated : 12 Sep 2024 07:01 AM
சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்பேரவை தலைவர் த.வெள்ளையன் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பிச்சிவிளை கிராமத்தில் இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் (76). நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் காலமானார். அவரது உடல்சென்னை பெரம்பூரில் உள்ளஇல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர், பெரம்பூர் வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், மா.பா.பாண்டியராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். நேற்று காலை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் மற்றும் அப்பகுதி மக்கள், வியாபாரிகள் அஞ்சலி செலுத்தினர். அவருக்கு அஞ்சலிசெலுத்தும் வகையில் பெரம்பூர் பகுதியில் கடைகளை வியாபாரிகள் அடைத்திருந்தனர்.
முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று பிற்பகலில் த.வெள்ளையன் உடல் சென்னையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம்திருச்செந்தூர் அருகேயுள்ள பிச்சிவிளை கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று மாலைஅவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT