மகாவிஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் காவல்

மகாவிஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் காவல்
Updated on
1 min read

சென்னை: சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘பரம்பொருள்' அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு கடந்த மாதம் 28-ம் தேதி ‘தன்னம்பிக்கை ஊட்டும் பேச்சு’ என்ற வகையில் சொற்பொழிவாற்றினார். அப்போது மாற்றுத் திறனாளிகள் குறித்த அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே, ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணு, கடந்த சனிக்கிழமை, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை போலீஸார் முடிவு செய்தனர். இதற்காக, மகாவிஷ்ணு பலத்த பாதுகாப்புடன் புழல் சிறையில் இருந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு நேற்று போலீஸ் வாகனத்தில் அழைத்து வரப்பட்டார். அவரை 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதிக்க கோரி போலீஸார் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இதன் மீது விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட், 3 நாள் காவலில் மகாவிஷ்ணுவை விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி வழங்கினார். இதையடுத்து, அவரை போலீஸார் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in