Last Updated : 02 Aug, 2014 09:00 AM

 

Published : 02 Aug 2014 09:00 AM
Last Updated : 02 Aug 2014 09:00 AM

சம்ஸ்கிருதத்தின் அழிவுக்கு திமுகவே முக்கிய‌ காரணம்: கன்னட எழுத்தாளரின் பேச்சால் பரபரப்பு

சம்ஸ்கிருதம் தென்னிந்தியாவில் அழிக்கப்பட்டதற்கு திமுகவே முக்கிய காரணம் என்று கன்னட எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா பேசியுள்ளார். இதற்கு கர்நாடக மாநில திமுகவும், சில தமிழ் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரபல கன்னட எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா பேசுகையில்,' 'மோடி தலைமையிலான மத்திய அரசு 'சம்ஸ்கிருத வாரம்' கொண் டாடுவதாக அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தியாவின் பண்டைய வரலாறையும், பெரும் கலைகளை யும் சம்ஸ்கிருதத்தை தவிர்த்து விட்டு முழுமையாக‌ புரிந்து கொள்ள முடியாது. அனைத்து மொழிகளுக்கும் சம்ஸ்கிருதமே அன்னை. ஆனால் சம்ஸ்கிருத மொழிக்கான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை.

கன்னடர்கள் கெட்டுவிட்டார்கள்

சம்ஸ்கிருதம் அழிக்கப்பட்ட தற்கு தமிழ்நாட்டில் முக்கிய கட்சியாக இருக்கும் திமுக முக்கிய காரணம். பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி போன்றவர்கள் சம்ஸ்கிருதத்தை அழிக்க, பல முறையான‌ திட்டங் களை தீட்டி போராடினர். சில அடிப்படைவாத தமிழ் அமைப்பு களும் அவர்களோடு சேர்ந்து தீவிரமாக போராடியதால்தான், இன்றைக்கு சம்ஸ்கிருதம் முழுமை யாக அழிக்கப்பட்டிருக்கிறது.

இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ் என அனைத்து மொழிகளிலும் சம்ஸ்கிருதத்தின் தாக்கம் இருக்கிறது. எல்லா மொழிகளிலும் சம்ஸ்கிருதம் இரண்டற கலந்திருக்கிறது. கன்னட மொழியில் சரிபாதி சம்ஸ்கிருதமே வியாபித்திருக்கிறது. ஆனால் சில கன்னட எழுத்தாளர்களும், பேராசிரியர்களும் சமஸ்கிரு தத்தை திட்டமிட்டு புறக்கணித்து வருகிறார்கள்.இதற்கு திமுக போன்ற தமிழ் அமைப்புகளின் போராட்டம்தான் காரணம்.அவர்களை பார்த்து இவர்களும் கெட்டுப்போய் விட்டார்கள்.

சம்ஸ்கிருதத்தை எதிர்த்துவிட்டு ஆங்கிலத்திற்கு அடிமையாகி விட்டார்கள். ஆங்கில மொழியின் தாக்கத்தால் கன்னடர்களே கன்ன டத்தை மறக்கும் நிலை ஏற்பட் டுள்ளது. எனவே சம்ஸ்கிருதத்தை முழுமையாக கற்றால்தான் கன்ன டத்தை ஒழுங்காக அறிந்துகொள்ள முடியும்'' என்று பேசினார்.

திமுக கண்டனம்

கன்னட எழுத்தாளரின் சர்ச்சைக் குரிய பேச்சுக்கு கர்நாடக மாநில திமுகவும் சில‌ தமிழ் அமைப்பு களும் கடும் கண்டனம் தெரி வித்துள்ளனர். வியாழக்கிழமை இது தொடர்பாக கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ராமசாமி, 'தி இந்து'விடம் கூறியதாவது:

'சம்ஸ்கிருதம் எந்த காலத்திலும் மக்களால் பேசப்பட்ட மொழி அல்ல. கோயில்கள் உள்ளிட்ட சில இடங்களில், சில மனிதர்களால் மட்டுமே பேசப்பட்ட மொழி. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் முழுமையாக வழக்கில் இருந்த மொழியே அல்ல‌. ஏற்கெனவே செத்துப்போன மொழியை மீண்டும் மக்களிடம் திணிப்பதை நாங்கள் எதிர்க்கிறோம்.

மத்திய அரசோ அல்லது வேறு சிலரோ சம்ஸ்கிருதம், இந்தி போன்ற மொழிகளை தமிழர்கள் மீது மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட அனைத்து மொழி பேசும் மக்கள் மீதும் திணிப்பதையும் திமுக எதிர்க்கிறது.

தமிழின் தொன்மையையும், சிறப்பையும் பொறுக்க முடியாமல்தான், சம்ஸ்கிருதத்தை அனைத்திற்கும் அன்னை மொழி என இவரைப் போன்றவர்கள் கூறி வருகிறார்கள். இதனை இங்குள்ள சில கன்னட எழுத்தாளர்களே ஏற்க மாட்டார்கள். சம்ஸ்கிருத வாரத்தைப் போல இந்தியா முழுவதும் தமிழ் மொழி வாரம் கொண்டாட மோடி ஒத்துக்கொள்வாரா?' என்று ராமசாமி கேள்வி எழுப்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x